ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தது பற்றி ஓ.பன்னீர்செல்வம் கருத்து
அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.;
தேனி,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்த்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்த ஜே.சி.டி.பிரபாகர், அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பொங்கலுக்கு முன் பல முக்கிய தலைவர்கள் த.வெ.க.வில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில், ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தது ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க.வில் இணைந்த பின் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், “தமிழ்நாட்டில் வீடுதோறும் விஜய் முழக்கமாக உள்ளது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி விஜய்யை சந்தித்தபோது ஏற்பட்டது. பொறுப்பு இல்லாவிட்டாலும் மாற்றம் நிகழும் என்பதற்காக இணைந்துள்ளேன் என்றார்.
இந்த நிலையில், தேனியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஜே.சி.டி.பிரபாகர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஜே.சி.டி.பிரபாகர் என்னுடன் தான் இருந்தார். அவர் என்னை விட்டு வெகுதூரம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் என்னுடன் இன்றுவரை தொடர்பில்தான் இருந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், அ.தி.மு.க.வில் பிரிந்து கிடக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும்.
அப்படி ஒன்று சேர்ந்தால்தான் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை மலரச் செய்ய முடியும். பிரிந்து கிடந்தால் அதற்கு வாய்ப்பு இல்லை. பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.