தொடர் விடுமுறை; சாரல் மழைக்கு நடுவே கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குணா குகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.;
திண்டுக்கல்,
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், ஓணம் பண்டிகை, மிலாடிநபி தினம் மற்றும் வாரஇறுதி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்தோடு படையெடுத்துள்ளனர்.
அந்த வகையில் கொடைக்கானலில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இருப்பினும் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு வரும் மக்கள், சாரல் மழையில் நனைந்தவாறு அங்குள்ள இதமான காலநிலை அனுபவித்து மகிழ்கின்றனர்.
அங்கு வனப்பகுதியில் உள்ள குணா குகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மேலும் அங்குள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், கொடைக்கானல் செல்லும் சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.