தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கூட்டணி குறித்து பிரேமலதா ஆலோசனை
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.;
சென்னை,
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி உள்பட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். கூட்டத்தில், தேமுதிக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது குறித்தும், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.