சரக்கு ரெயில் தீ விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
தீ விபத்து ஏற்பட்ட ரெயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகையால் பொதுமக்கள் பாதிப்பு – தீயணைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்க வேண்டும்.
சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மும்பைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சரக்கு ரெயிலில் ஏற்பட்டிருக்கும் தீ விபத்திலிருந்து வெளியேறும் கரும்புகை திருவள்ளூர் ரெயில் நிலையத்தைச் சுற்றிய 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சூழ்ந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட ரெயில் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு, கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.