தூய்மை இயக்கத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணி - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கும் திட்டத்தை தொடங்கியிருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update:2025-06-05 20:52 IST

சென்னை,

தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு வகையான கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தூய்மை தமிழ்நாடு சார்பில் முதற்கட்டமாக, சென்னை தலைமைச் செயலகம் உள்பட மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பல்வேறு வகையான கழிவுகளை சேகரிக்கும் மாபெரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.62025) பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில், அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக தனித்தனியாக சேகரிக்கும் பணி குறித்து காணொலி காட்சி வாயிலாக மாவட்ட கலெக்டர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;-

"சென்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் தூய்மையாக்க வேண்டும், குப்பை மேலாண்மை சரியாக செய்யவேண்டும் என்பதற்காக, தூய்மை மிஷன் என்ற திட்டத்தினை முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் சார்பாக மானியக் கோரிக்கையில் அறிவித்தோம். இதற்காக முதல்-அமைச்சர் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.

இதன் முதல்படியாக, இன்றைக்கு (World Environment Day) உலக சுற்றுச்சூழல் தினமான இன்று நம்முடைய மாநிலத்திலுள்ள 38 மாவட்டங்களிலுள்ள கிட்டத்தட்ட 1,100 அரசு அலுவலகங்களில் பல்வேறு வகையான குப்பைகளை கண்டறிந்து சேகரிக்கின்ற இந்த மாபெறும் திட்டத்தை இன்றைக்கு துவங்கி வைத்திருக்கிறோம். நேற்றும் இன்றைக்கும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

38 மாவட்டங்களிலும் நடக்கக்கூடிய அனைத்து பணிகளையும் கண்காணிப்பதற்கும், அனைத்து மாவட்ட கலெக்டர்களிடம் பேசுவதற்கும் மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் ஒரு கட்டளை மையம் (வார் ரூம்) உருவாக்கியிருக்கின்றோம்.

இதுவரைக்கும், சுமார் 300 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த குப்பைகளை சட்டவிதிகளின்படி அப்புறப்படுத்துவதற்கு (Standard Operating Procedure) உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நாட்களில் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்துவிட்டு, அடுத்தகட்டமாக, கிராம பஞ்சாயத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கு இன்னும் 10 நாட்களில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்த திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்குபெற்று தூய்மையான தமிழ்நாட்டை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம் என்று இந்த திட்டத்தின் மூலமாக, அரசின் சார்பாக பொதுமக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்