எம்ஜிஆர் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் - மனம் திறந்த மு.க.ஸ்டாலின்

விளையாட்டு வீரர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.;

Update:2026-01-16 16:57 IST

சென்னை,

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வைப் வித் எம்.கே.எஸ். என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், முதலாவதாக விளையாட்டு வீரர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தற்போது, 2-வதாக தமிழகத்தை சேர்ந்த பிரபல இளம் இசை கலைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இசை கலைஞர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் காரில் பயணம் செய்யும்போது அதிகம் விரும்பி கேட்கும் பாடல் எது?

பதில்:- எம்.ஜி.ஆர். பாடல்களை அதிகம் விரும்பி கேட்பேன். மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா.. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பாடலை மிகவும் விரும்பி கேட்பேன். அதேபோல், தெய்வத்தின் தெய்வம் படத்தில் பி.சுசீலா பாடிய, நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை.. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை என்ற பாடலையும் விரும்பி கேட்பேன்.

கேள்வி:- நீங்கள் சிறு வயதில் ஜாலியாக கேட்டு ரசித்த பாடல் எது?

பதில்:- பறவைகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம். பாடல்கள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒருவிதம். இந்தப் பாடல் எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் இப்போது அது தேவையில்லை.

கேள்வி:- உங்களுக்கு மிகவும் பிடித்தது இளையராஜா இசையமைத்த பாடல்களா?, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்களா?

பதில்:- 2 பேரையும் மிகவும் பிடிக்கும். அதற்கு முன்பு எம்.எஸ்.விஸ்வநாதனை பிடிக்கும். இப்போது இளைஞர்கள் நிறைய பேர் இசையமைக்க தொடங்கிவிட்டனர். அனிருத் உள்பட பலர் வந்துள்ளனர். எல்லாருடைய பாடல்களும் சூழலுக்கு தகுந்த மாதிரி பிடிக்கும்.

கேள்வி:- உங்களுக்கு மெலடி பாடல்கள் பிடிக்குமா?. பீட் பாடல்கள் பிடிக்குமா?.

பதில்:- மெலடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில் கானா பாடல்களை ரசித்து கேட்பேன்.

கேள்வி:- பேரன், பேத்திகளுடன் சேர்ந்து பாடல்கள் கேட்பீர்களா?.

பதில்:- கேட்டிருக்கிறேன். அவர்களுடன் சேர்ந்து நடனமும் ஆடியிருக்கிறேன்.

கேள்வி:- இளையராஜா இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?.

பதில்:- பாசப்பறவைகள் படத்தில் வரும் தென்பாண்டி தமிழே என்ற பாடல்.

கேள்வி:- பாடல் கேட்பதற்கும், உங்கள் மனநிலைக்கும் என்ன தொடர்பு?.

பதில்:- மனச்சோர்வு ஏற்பட்டால் பாட்டு கேட்பேன். இறுக்கமான மனநிலையில் இருக்கும்போதும் பாடல் கேட்பேன். தூங்குவதற்கும் பாடல் கேட்பேன். இரவு தூங்கும்போது யூடியூப்பில் விரும்பிய பாடலை தேர்வு செய்து கேட்பேன். அதிலும் பழைய பாடல்களை அதிகம் விரும்பி கேட்பேன்.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த பாடகர் யார்?

பதில்:- டி.எம்.சவுந்தரராஜன் ரொம்ப பிடிக்கும். அவர் சிவாஜி கணேசனுக்கு தகுந்த மாதிரி பாடுவார். எம்.ஜி.ஆருக்கு தகுந்த மாதிரி பாடுவார். ஜெமினி கணேசனுக்கு தகுந்த மாதிரியும் பாடுவார். அது அவர்களே பாடுவதுபோல் இருக்கும். அதனால், என்னை கவர்ந்த பாடகர்களில் அவரும் ஒருவர்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்