ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த ஜீவா, அசோக் செல்வன்
உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக நடிகர் சூரி வழங்கினார்.;
மதுரை,
மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண திரைத்துறை பிரபலங்கள் பலர் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று காலை நடிகர் சூரி ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வருகை தந்தார். முன்னதாக போட்டியை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்.
தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன், தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வருகை தந்தார். நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அருண் பாண்டியனும் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டார். இதேபோல், நடிகர் ஜீவா இன்று பாலமேட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டுகளித்தார்.