பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக - சீமான்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.;

Update:2025-11-14 00:34 IST

கோப்புப்படம் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உரிய ஊதியம், ஊக்கத்தொகை, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வழங்க வலியுறுத்தி மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் சென்னையில் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அறிவிற் சிறந்த அடுத்தத் தலைமுறையை உருவாக்கும் பேரறிஞர்களான ஆசிரியர் பெருமக்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

Advertising
Advertising

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும்.

UGC நெறிமுறைகளின்படி கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கு முதுநிலைப் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

பணியில் உள்ள ஆசிரியர் பெருமக்களின் புத்தாக்கப் பயிற்சிக்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும்.

இணைப்பேராசிரியர் பணி மேம்பாட்டிற்குப் பி.எச்.டி கட்டாயம் என்ற நிபந்தனையைத் தளர்த்திட வேண்டும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவிக்கான கல்லூரிக் கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ் கல்வித்தகுதி தேர்வு பல்கலைக்கழகங்களில் முடித்திருப்பவர்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும்.

கல்லூரி நிர்வாகிகளின் ஆசிரியர் விரோதப்போக்கினை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தனித்தனியாகப் பிரித்து, அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு எவ்விதப் பணிப்பலன்களும் கிடைக்கப்பெறாமல் செய்யக் கொண்டு வரப்படும் தனியார் பல்கலைக்கழகம் திருத்த சட்ட முன்வடிவை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கல்லூரி ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தங்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 40-வது முறையாகத் தொடர் காத்திருப்பு அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்துக் கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்