இந்தியாவின் முதல் "ஐயன்மேன் 5150 டிரையத்லான் போட்டி'' சென்னையில் நடைபெறும் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஐயன்மேன் 5150 டிரையத்லான் அமைப்பினருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.;

Update:2025-09-05 16:31 IST

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் "ஐயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை (IRONMAN 5150 Triathlon Chennai)" போட்டி அறிவிப்பு குறித்து சென்னையில் இன்று (05.9.2025) செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியது பின்வருமாறு;

அனைவருக்கும் வணக்கம், இந்தியாவின் முதல் ‘ஐயன்மேன் 5150 டிரையத்லான்’ (IRONMAN 5150 டிரையத்லான்) சென்னையில் 2026 ஜனவரி 11 அன்று நடைபெறவிருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். தமிழ்நாடு தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நடத்துவதற்கு எங்களுக்கு அசைக்க முடியாத ஆதரவு அளித்து வரும் முதல் - அமைச்சருக்கு நன்றி. தமிழ்நாட்டிற்கு இந்தியாவின் முதல் ஐயன்மேன் 5150 டிரையத்லானை சென்னையில் நடத்துவது ஒரு பெருமை.

எங்கள் முதல்-அமைச்சர் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டை ஒதுக்கியுள்ளார்.இதன் மூலம், ஆசியாவில் மூன்றாவது நாடாகவும், உலகில் ஆறாவது நாடாகவும் இந்தியா ஐயன்மேன் பிராண்டின் கீழ் இந்த மதிப்புமிக்க ஒலிம்பிக்-தூர டிரையத்லானை நடத்துகிறது. இந்தியாவில் முதல் முறையாக உலக கிளாசிக் டூயத்லான் தொடர் தொடங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனுடன், ஐயன்மேன் ஐயன்கிட்ஸ் (IRONKIDS) சென்னையும் சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

நீச்சல் நிகழ்வு சான்றளிக்கப்பட்ட ப்ளூ பிளாக் கடற்கரையில் திட்டமிடப்பட்டுள்ளது. சைக்கிளிங் மாமல்லபுரம் நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அழகிய பயணமாக இருக்கும். ஓட்ட நிகழ்வு கிழக்கு கடற்கரை சாலையில் கடலுக்கு எதிராக நடைபெறும். சுமார் 300 டிரையத்லீட்கள், 200 டூயத்லீட்கள் மற்றும் ஏராளமான ஐயன்கிட்ஸ் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐயன்மேன் இந்தியாவுடன் இணைந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்த பன்னாட்டு அளவில் பாராட்டப்பட்ட பந்தய வடிவத்தை நமது நாட்டிற்கு கொண்டு வருவதில் பெருமை கொள்கிறது, இது அனைத்து வயதினரையும் உற்சாகப்படுத்தும்.

இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளுக்கான முதன்மை இடமாக உள்ள புகழை வலுப்படுத்தும். முதலமைச்சரின் தலைமையில், ஐயன்மேன் 5150 டிரையத்லான் சென்னையை மாபெரும் வெற்றியாக்க தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஊக்கத்தை வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த டிரையத்லான் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைய உங்களின் முழு ஆதரவை கோருகிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற ஒன்றாக உழைப்போம். நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இப்போட்டியை இணைந்து சிறப்பாக நடத்துவது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஐயன்மேன் 5150 டிரையத்லான் அமைப்பினருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர். அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஐயன்மேன் இந்தியாவின் தலைவர் தீபக் ராஜ், ஐயன்மேன் இந்தியா போட்டியின் துணை நடுவர் ஆர்த்திசுவாமிநாதன், அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்