சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது.;
மதுரை,
ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மாட்டுப்பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்க உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு நடந்தது. அதில், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5,757 காளைகளும், 1,913 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். பல்வேறு கட்ட சோதனைக்கு பின்பு பாலமேட்டில் விளையாட தகுதி வாய்ந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலமேட்டில் உள்ள மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் தயார் நிலையில் வாடிவாசல், பார்வையாளர் மாடம், மற்றும் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியை இன்னும் சற்று நேரத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளது. போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.