திருவள்ளுவர் திருநாள் விருதுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.;

Update:2026-01-16 07:26 IST

சென்னை,

பன்னெடுங்காலமாக வற்றாத படைப்புகளை கொண்டு, சீரிளமையோடு தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் அளித்து வருகிறது.

இதன்படி இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ்மறைக் குடமுழுக்குகள் 1400-க்கு மேல் நடத்தி இருக்கிறார். சைவ சித்தாந்த நுண்பொருளுடன் திருக்குறளின் அறக்கருத்துகளை செந்தமிழில் சிந்தை இனிக்கப் பேசுவதில் இவர் வல்லவர்.

பெரியார் விருது

சமூகநீதி கிடைக்க பாடுபட்டவர்களை சிறப்பிக்கும் பொருட்டு தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 பேர் பெற்றுள்ளனர். 2025-ம் ஆண்டுக்கான விருது வக்கீல் அ.அருள்மொழிக்கு வழங்கப்பட இருக்கிறது. இவர் சுயமரியாதை, சமூகநீதி, பெண் விடுதலை, மற்றும் பெரியாரியலுடன் சேர்ந்து பாவேந்தரின் கவிதைகளில் அதிக ஈடுபாடுகொண்டவர்.

அம்பேத்கர் விருது

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் விருது 1998-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 27 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டுக்கான விருது சிந்தனைச்செல்வனுக்கு வழங்கப்படுகிறது. அம்பேத்கரின் சமநீதி, அரசியலமைப்பு சட்ட நெறிகள், சமூகநீதி ஆகியவை குறித்து அழகாகவும், ஆழமாகவும் முழங்கி வருபவர்.

அண்ணா விருது

2025-ம் ஆண்டுக்கான இந்த விருது, அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படுகிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் பங்கெடுத்தவர். இதுவரை 10 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தற்போது நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

காமராஜர் விருது

2025-ம் ஆண்டுக்கான இந்த விருது, எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட இருக்கிறது. பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் அனைத்துச் சமயக் கோட்பாட்டு இலக்கியங்களையும் ஒப்பிட்டு மேடைகளில் உரையாற்றுவார்.

பாரதியார் விருது

பாரதியார் புகழ் பரப்பும் வகையில் கவிதை உரைநடை நூல்களைப் படைத்தோர், பிறவகையில் தமிழ்த்தொண்டு புரிவோருக்கு மகாகவி பாரதியார் விருது 1997-ம் ஆண்டு முதல் வழங்கப்பெற்று வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான இந்த விருது கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் ஆகிய பன்முக ஆற்றலைக் கொண்டவர்.

பாரதிதாசன் விருது

2025-ம் ஆண்டுக்கான இந்த விருது கவிஞர் யுகபாரதிக்கு வழங்கப்படுகிறது. இவர் இரண்டாயிரம் திரைப்பட பாடல்களை எழுதிய பாடலாசிரியர். மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் நவீனக் கவிதை என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார்.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

2025-ம் ஆண்டுக்கான இந்த விருது வெ.இறையன்புக்கு வழங்கப்படுகிறது. இவர் எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர், சமூக ஆர்வலர் மற்றும் தன்னம்பிக்கைச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களில் ஈடுபாட்டுடன் இயங்கித் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக செயலாற்றிப் பணி நிறைவு பெற்றவர்.

கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

2025-ம் ஆண்டுக்கான இந்த விருது சு.செல்லப்பாவுக்கு வழங்கப்படுகிறது. நெல்லை நகர இந்து தொடக்கப் பள்ளியில் 1967-ல் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவிப்பு பற்றித் தனிவழிகளைக் கண்டுபிடித்து முறைகளைக் கையாண்டு பாடங்களைப் புதுமையான முறையில் நடத்தியவர்.

கலைஞர் விருது

கருணாநிதியின் தமிழ்த் தொண்டினைப் போற்றும்வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அடியொற்றி தமிழுக்குத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்கும் வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் விருது” 2024-ல் தோற்றுவிக்கப்பட்டது.2025-ம் ஆண்டுக்கான இந்த விருது, விடுதலை விரும்பிக்கு வழங்கப்படுகிறது. எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், ஆய்வாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர்.

இந்த விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படும். இந்த விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்