சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்த தமிழக அரசின் மனு தள்ளுபடி

தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.;

Update:2025-11-27 21:49 IST

சென்னை,

சென்னை போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குன்றத்தூரைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தாய் சரளாவை சுத்தியலால் அடித்து கொன்றார். பின்னர் அவரது தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி, தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மகளிர் கோர்ட்டு தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தஷ்வந்த் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால், சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்ததோடு, தஷ்வந்தை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தஷ்வந்த் விடுதலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்