மூலக்கரை கிராமத்தில் இஸ்லாமியர்கள், இந்துக்களை அனுமதிப்பதில்லை என்று பரவும் செய்தி - தமிழக அரசு விளக்கம்
மூலக்கரை கிராமத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் பகுதிக்குள் இந்துக்களை தண்ணீர் எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என்று செய்தி பரவி வருகிறது.;
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை என்ற பஞ்சாயத்தில் சிறுபான்மையாக இருக்கும் இந்துக்களை இஸ்லாமியர்கள் தங்கள் பகுதிக்குள் தண்ணீர் எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த செய்தி உண்மை இல்லை; வெறுப்பைப் பரப்பும் வதந்தி என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
"ஸ்ரீமூலக்கரை கிராமத்தில் வெவ்வேறு சமூக மக்கள் வசிக்கும் அனைத்து குக்கிராமங்களுக்கும் தனித்தனியே நீர்தேக்க தொட்டிகள் உள்ளதால் தண்ணீர் பிரச்சனை ஏதும் இல்லை. 800 இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கும் பேட்மாநகரத்தில் கிராம நிர்வாக அலுவலகம், பொதுத்துறை வங்கி, 2 பள்ளிகள் அமைந்துள்ளன.
இங்கு அனைத்து சமுதாய மக்களும் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக வந்து செல்கிறார்கள். இந்தக் கிராமத்தில் அனைத்து இன மக்களும் எந்தவொரு பேதமும் இல்லாமல் பழகி வருகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளத்தில் வெளியான இச்செய்தியை மீண்டும் பரப்பி வருகின்றனர். அதில் குறிப்பிட்டுள்ள எந்தத் தகவலும் உண்மை இல்லை” என்று ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மதவெறுப்பைத் தூண்டுவது சட்டப்படி குற்றம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.