செவிலியர்கள் பணி நிரந்தர கோரிக்கை: தி.மு.க. அரசு அடம்பிடிப்பது கண்டனத்திற்குரியது - பன்னீர்செல்வம்
செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
“மருத்துவர்களின் ஆலோசனைப்படி நோயாளிகளுக்கு சேவை மனப்பான்மையுடன் சிகிச்சை அளிப்பவராகவும், நோயாளிகளின் பாதுகாவலராகவும், உயிர் காக்கும் பணியில் முக்கியப் பங்கு வகிப்பவராகவும் திகழ்பவர்கள் செவிலியர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட சேவை புரியும் செவிலியர்களை துன்புறுத்துவது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அவர்களின் வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்று 2017 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று வாக்குறுதி அளித்தார். இது மட்டுமல்லாமல், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 356-ல், ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அதன் ஆட்சிக் காலமே முடிவடையும் தருவாயில் உள்ள நிலையிலும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் செவிலியர்களை சொல்லொண்ணா துயரத்திற்கு தி.மு.க. அரசு ஆளாக்கியிருக்கிறது. தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 3,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 8,000 செவிலியர்கள் பல ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
மருத்துவ தேர்வு வாரியத்தால் முறையாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படாததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்த நிலையில், இந்த வழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பினை நிறைவேற்ற மனமில்லாத தி.மு.க. அரசு, அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
தி.மு.க. அரசின் செயலைக் கண்டித்தும், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பினை அமல்படுத்தக் கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், அவர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய பணி நிரந்தர கோரிக்கையினை நிறைவேற்றாமல், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து போராட்டம் நடத்தினர் என்ற காரணத்தைச் சுட்டிகாட்டி செவிலியர்களை தி.மு.க. அரசு கைது செய்துள்ளது. இதில் சிலர் மயக்கமுற்றுள்ளனர். செவிலியர்கள் மயக்கம் அடைந்து பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, அவர்களுடைய நியாயமான கோரிக்கையினை, வாக்குறுதியினை, நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தி.மு.க. அரசு அடம்பிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தினையும், தேர்தல் வாக்குறுதியையும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பினையும் கருத்தில் கொண்டு, 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோட்பாட்டினை நிலைநாட்டும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.