பற்களை பிடுங்கிய வழக்கில் சிக்கிய போலீஸ் அதிகாரி பல்வீர் சிங்கிற்கு புதிய பதவி
பல்வீர் சிங் மீதான பணியிடை நீக்கம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது;
சென்னை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர் சிங் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.அவர் மீது நெல்லை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில், பல்வீர் சிங் மீதான பணியிடை நீக்கம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 8-வது பட்டாலியன் உதவி கமாண்டன்டாக நியமனம் செய்யப்பட்டார்.பல்வீர் சிங் மீது பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை உத்தரவும் பிறப்பித்தது.இந்த நிலையில் பல்வீர்சிங், ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் நேற்று பிறப்பித்தார்.