காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க கோரி தமிழகத்தில் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் டிசம்பர் 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், தமிழக டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கம், டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு அரசு எஸ்சி/எஸ்டி டாஸ்மாக் பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆகிய சங்கங்களை உள்ளடக்கிய டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சுற்று சூழல் பாதிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிடட மலைபிரதேசங்களில் நெகிழி பொருட்கள் விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) தனது மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களின் விலையோடு, கூடுதலாக 10 ரூபாய் பெற்று கொள்ளவும், பருகிய பிறகான காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து கூடுதலாக கொடுத்து ரூ,10ஐ திரும்ப பெறும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக்கொண்டு, இதர மாவட்டங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த திட்டம் சமூக பொறுப்புள்ள அனைவரும் வரவேற்கத் தக்கதாகும்.
இத்திட்டதை அமலாக்குவதற்கான முறையான செயல்முறையினை டாஸ்மாக் நிர்வாகம் உருவாக்காமல் கடை ஊழியர்களிடம் திணித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் சரக்கு இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவுமே இடநெருக்கடி, விற்பனைக்கேற்ப ஊழியர் எண்ணிக்கை இல்லாத நிலையில் எண்டு டூ எண்டு பில்லிங் திட்டமும் மற்றும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் திட்டமும் கடுமையான வேலைப்பளுவை கூட்டியுள்ளது.
இந்த நிலையில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்ட அமலாக்கம் தொடர்பாக கடை ஊழியர்களின் பணி நிலைமைகளில் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் மாற்றம் செய்வது சட்டத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரனதாகும். ஏற்கனவே வேலைப்பளுவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலும் கூடுதலான வேலைப்பளுவை திணிப்பது ஏற்புடையதல்ல.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யவே பணிநியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை காலி எச்சில் மதுபாட்டில்களை வாங்கி, கணக்கு பரமரிப்பது, பணத்தை வங்கியில் செலுத்துவது உள்ளிட்ட கூடுதல் வேலைகளை செய்ய மிரட்டுவதும், கடை ஆய்வு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிகையில் ஈடுபடுவதும் ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் கடை ஊழியர்களை பயன்படுத்தாமல் மாற்று திட்டத்தை உருவாக்க தொழிற்சங்கங்கள் பல்வேறு ஆலேசனைகளை எடுத்து கூறிய பிறகும், டாஸ்மாக் நிர்வாகம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் தொழிற்சங்கங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து இத்திட்டத்தை கடை ஊழியர்கள் தலையில் சுமத்தி வருகிறது.
எந்தவொரு பொருளுக்கும் அதிகபட்ச விலையோடு அதன் பேக்கிங் செலவும் உட்பட்டதாகும். டாஸ்மாக் விற்பனை செய்யும் மதுபானமும், பாட்டிலும் வாங்குபவருக்கு சொந்தமானதாகும். ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் அந்த பாட்டிலை வாங்கி அதை விற்று அந்த பணத்தை வாங்குபவருக்கு கொடுக்காமல் தன்வசம் எடுத்துக்கொள்கிறது. இந்த விசித்திரமான விற்பனை முறை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாததாகும்.
மேலும் மதுபாட்டிலுக்கான தொகையோடு வசூலிக்கப்படும் ரூ.10ம், திரும்பி வராத பாட்டிலுக்கான தொகையையும் டாஸ்மாக் எடுத்துக் கொள்கிறது, ஆக இந்த திட்டத்தால் சுற்று சூழல் பாதிப்பு குறைகிறதோ இல்லையோ, டாஸ்மாக்கிற்கு இரண்டு வகையில் கூடுதல் வருவாய் ஆதாயம் கிடைக்கிறது. பாதிக்கப்படுவது ஊழியர்களும் மது நுகர்வோரும் தான்.
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பருகுவதற்கு கடைகளோடு இணைந்த மதுக்கூடங்கள் ஏலம் மூலம் தனியார் நடத்த அனுமதிப்படுகிறது. இந்த மதுக்கூடங்கள் காலி பாட்டில் சேகரித்து கொள்ளவும், திண்பண்டங்கள் விற்பனை செய்து கொள்ளவே உரிமம் வழங்கப்படுகிறது. இந்த மதுக்கூடங்கள் மூலமாக காலி பாட்டில்களை சேகரிக்க செய்யும் டாஸ்மாக் நிர்வாகம், காலி மது பாட்டில்களை விற்பனை செய்வதற்கும் ஏலம் விட்டப்பட்டது. ஆக காலி மதுபாட்டில்களை சேரிக்க இரண்டு விதிமான உரிமங்கள் பெற்ற ஒப்பந்ததாரர்கள் இருக்கும் போது, விற்பனைக்கென பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களையும் காலி பாட்டில் வாங்கும் பணியை செய்ய நிர்ப்பந்தம் செய்வது நிலையாணை சட்டத்திற்கும், தொழிற்தகராறு சட்டத்திற்கும் விரோதமானது.
நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டும் டாஸ்மாக் நிர்வாகம், இதே நீதிமன்றங்கள் ஊழியர்களுக்கு சாதகமாக பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளை அமல்படுத்தாமல் மேல்முறையீடு செய்கிறது. முன்மாதிரி நிறுவனமாக செயல்பட வேண்டிய டாஸ்மாக் நிறுவனம் சட்டங்களை மதிக்காமலும், ஊழியர்கள் நலனின் அக்கறை செலுத்தாமலும் நடப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் குறித்தான பொது நல வழக்கில் ஊழியர்கள் நலனின் அக்கறையுள்ள சங்கங்கள் தங்களையும் இணைத்து ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலைப்பளு, சுகாதார கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பணிகளை செய்து வருகின்றன.
இந்த பொது நல வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டத்தை நிறுத்தி வைக்கவும், ஊழியர்களின் தலையில் திணிப்பதை கைவிடவும், மாற்று திட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வருகிற 5.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒன்றுபட்ட போராட்டத்தில் இணைய விரும்பும் சங்கங்களையும் இணைத்து சக்தி மிக்க ஆர்ப்பாட்டமாக நடத்திட வேண்டுகிறோம்.
இவ்வாறு மேற்சொன்ன சங்கங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.