பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பமான பாடம் அறிவியல் தான்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

இந்தியாவிலேயே மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக நமது தமிழ்நாடு உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.;

Update:2025-07-20 01:42 IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அழகர் பப்ளிக் பள்ளியில் நேற்று மாணவர்களின் அறிவியல் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கூறியதாவது:

"வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி" என்ற நிகழ்வில் பங்கேற்க வந்திருக்கும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் விதமாக, அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் விதமாக வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்வு 2012-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அறிவியல் சிந்தனைகளை தூண்டக்கூடியதாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களாகிய நீங்கள் தற்பொழுது 6 முதல் 12-ம் வகுப்பு வரை வெவ்வேறு வகுப்புகளில் பயின்று வருகிறீர்கள். குறிப்பாக பெரும்பாலான மாணவர்களுக்கு விருப்பமான பாடம் எதுவென்றால் அறிவியல் தான். அறிவியல் பாடம் ஏன் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடமாக உள்ளது என்றால் அதன் விளைவுகளை உடனடியாக உணர்கிறோம் மற்றும் உடனடியாக அதன் பலனை பயன்படுத்துகிறோம். மற்ற பாடங்களில் அதன் பலனை உடனடியாக உணர முடியாது.

உதாரணமாக நான் ஒரு வரலாற்று மாணவன். வரலாறு பற்றி படிக்கின்ற பொழுது பழைய காலத்தில் உள்ள போர்கள், பழைய பேரரசுகள் எவ்வாறு வீழ்ந்தன, எவ்வாறு உயர்ந்தன என்பது பற்றி எல்லாம் கற்போம். அதனுடைய பலனை உடனடியாக உணர முடியாது. அதன் விளைவுகளை பற்றி புரிந்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் நமது வாழ்க்கையிலும், நமது நாட்டினுடைய முன்னேற்றத்திலும் அதன் தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் அறிவியல் அப்படிப்பட்டது அல்ல. குறிப்பாக எலக்ட்ரானிக் சம்மந்தாக கற்கின்ற பொழுது அதன் விளைவினை உடனடியாக உணர முடியும். அந்த காரணத்தினால் தான் அறிவியல் பாடம் என்பது மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவாக திகழ்ந்து வருகிறது.

அரசியலமைப்பை வகுத்த அறிஞர்கள் 1972-ம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தில் முக்கியமான பிரிவினை சேர்த்தார்கள். மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், மக்களிடமும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். அதற்கான முன் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற பிரிவினை அரசியலமைப்பில் சேர்த்தார்கள்.

அறிவியல் மனப்பான்மை என்றால் நமது வாழ்க்கையின் சிக்கல்களுக்கும், நமது நாடு எதிர்கொள்கின்ற சிக்கல்களுக்குமான தீர்வை நாம் மூடநம்பிக்கைகளிடமோ அல்லது அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகளிடமோ தேடக்கூடாது. அறிவியல் சார்ந்த தீர்வுகளுக்கு தான் மக்கள் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது என்பது அரசின் முக்கிய கொள்கையாக வகுக்க வேண்டும் என அரசியலமைப்பு பிரிவில் சேர்க்கப்பட்டது.

இந்தியாவிலேயே மிகச்சிறந்த அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இருக்கக்கூடிய ஒரு மாநிலமாக நமது தமிழ்நாடு உள்ளது. அதற்கான காரணமாக தொடர்ச்சியாக பல்வேறு அறிவியல் சார்ந்த படிப்புகளையும், அறிவியலின் முக்கியத்துவத்தையும் நமது கல்வியாளர்களும், தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார்கள். மூடநம்பிக்கைகளில் நாம் மூழ்கிவிடக்கூடாது என கல்வியாளர்களும், தலைவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மூடநம்பிக்கைகள் பற்றிய விழிப்புணர்வுக்காக தலைவர்கள் பாடுபட்டு இருக்கிறார்கள்.

கல்வியாளர்களிடமும் மூடநம்பிக்கைகளை ஒழித்துவிட்டு அறிவியல் மனப்பான்மையை மாணாக்கர்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்பறையில் கற்று கொடுத்து வருகிறார்கள். கல்லூரிகளிலும் மூடநம்பிக்கைகளை போக்குவதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து, அறிவியல் சார்ந்த தீர்வுகளை வலியுறுத்தி வருகிறார்கள். பல ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் விழிப்புணர்வு காரணமாக, மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழ்நாட்டில் தான் பொறியியல், அறிவியல், கணினி அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தவை உள்ளிட்ட அறிவியல் சார்ந்த படிப்புகளை படிக்கின்ற மாணவர்கள் அதிகமாக உள்ளனர்.

உலகத்திலேயே மிக அதிகமான தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான நிறுவனங்களில் முக்கிய பதவிகளில், மிக உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த பதவிகளில் தமிழ்நாட்டை சார்ந்த பொறியாளர்கள், அறிவியல் வல்லுநர்கள் பதவி வகிக்கின்றனர். கணினி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அரசு மற்றும் தனியார் சார்ந்த நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், நமது பெற்றோர்கள் அறிவியலை ஏற்றுக் கொண்ட விதம், இதன் காரணமாக தான் அறிவியல் சார்ந்த படிப்புகளில் மாணவர்கள் கற்றுக் கொண்டதினால் சிறந்த உயர்பதவிகளுக்கு சென்று இருக்கிறார்கள். இதன் விளைவாக உலக அளவில், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் துறை, பொறியியல் துறை, உயிர் தொழில்நுட்பவியல் துறை மிக அதிகமான மாணவர்கள் சேர்ந்து கற்றுக் கொண்டு உயர்கல்வி பெற்று, அந்த நாடுகளில் உள்ள உயர்ந்த கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் உயர்ந்த பதவிகளில் வகிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தை அறிவியலை நோக்கி நகர்த்துவதற்கு கல்வியாளர்கள், தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் சேர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அறிவியல் சார்ந்து படிக்காத ஒரு சமூகத்தில் ஏற்படும் விளைவுகளாக நாம் கருதுவது பிற்போக்கான கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளுதல் ஆகும்.

மாணவர்களுக்கு அறிவியலை ஊக்குவிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்பாக்கத்தை செய்து கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். காந்தத்தின் மூலம் மின்சாரத்தை மைக்கேல் பாரடே கண்டுபிடித்ததினால், மின்சாரம் என்ற மாபெரும் பயன்பாடு வந்தது. நீங்கள் எல்லாரும் எதிர்காலத்தில் மாபெரும் விஞ்ஞானிகளாக வர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாணவ மாணவியர்களின் அறிவியல் படைப்பு கண்காட்சியினை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, அழகர் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஏ.ஜெயராமன், பல்வேறு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்