பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ. பன்னீர்செல்வம்
பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை, பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பற்றாக்குறை என்ற அவல நிலை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நீடித்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் பணியாற்றும் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் சூழ்நிலையை தி.மு.க. அரசு உருவாக்கியுள்ளது.
உயர்கல்வியை எல்லோரும் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின்மூலம் லட்சக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர் பட்டம் பெற்றுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் நூறு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், வெறும் 37 பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும், 43 உதவிப் பேராசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், ஏற்கெனவே ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற நிலையில், இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதாகவும், இப்படிப்பட்ட மாறுதல் பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றும், இந்த நிலை நீடித்தால் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகும் என்றும், இதன்மூலம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகள், தேர்வுப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை காக்கும் வகையில், அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தி அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் பேராட்டத்தை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இதைத் தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்-அமைச்சர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வேறு பல்கலைக்கழகங்களின்கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்தி பல்கலைக்கழக அங்கீகாரத்தைக் காக்கவும், பல்கலைக்கழகங்களில் நிலவும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.