தென்காசி பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 2 தனியார் பஸ்கள் சென்றுகொண்டிருந்தன.
காமராஜர்புரம் பகுதியில் சென்றபோது 2 பஸ்களும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், தென்காசி பஸ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.