தென்காசி: பிளாஸ்டிக் குடோனில் 10 மணி நேரத்திற்கு மேலாக பற்றி எரியும் தீ
குடோனில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.;
தென்காசி,
தென்காசி மாவட்டம் சிவசைலம் அருகே ஒரு பழைய பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோனில் நள்ளிரவு ஒரு மணியளவில் தீ ஏற்பட்டது. குடோன் என்பதால் சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது. இந்த விபத்து காரணமாக சுற்றி உள்ள பகுதியில் கரும் புகை சூழ்ந்தன.
இதனையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மளமளவென எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் சுமார் 10 மணி நேரமாக போராடி வருகின்றனர்.
தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.