இயற்கை பேரிடரிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாத்திட மத்திய அரசு உதவ வேண்டும் - திருமாவளவன்
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என்று திருமாளவளன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இலங்கையில் வீசிய 'டிட்வா' புயல் காணச் சகிக்காத கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன், சுனாமி ஏற்படுத்திய பொருளாதார அழிப்பைவிட இப்போதைய டிட்வா புயல் ஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பாதிப்பு பன்மடங்கு அதிகமென்றும்; இத்தகைய பெரும்பாதிப்பிலிருந்து, இலங்கை மீண்டெழ பல ஆண்டுகளாகுமென்றும் தெரியவருகிறது. இந்த நெருக்கடியான பேரிடர்காலச் சூழலில், இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் பேருதவி புரிந்திடவேண்டும். தற்போது நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்திய அரசு, தமிழ் மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்கள் மீண்டெழும் வகையில் தொடர்ந்து உதவிசெய்ய வேண்டும்.
இப்புயல், மழை, வெள்ளத்தால் தென்னிலங்கையிலும் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதைப் போலவே, மலையகப்பகுதிகளிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். மலையகத்தமிழர்களின் வாழ்நிலை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய 'காலநிலை சார்ந்த இயற்கை பேரழிவாக' இந்த டிட்வா பதிவாகியுள்ளது. இதுவரை 334 பேர் பலியாகியும்,
370 பேர் காணாமல் போயும், 10 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகியும் இருக்கிறார்கள் என்று இலங்கையின் புயல் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. ஆனால், இழப்பு இதைவிடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையை 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியதன் பின்னர் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது இயற்கை பேரிடராக டிட்வா விளங்குகிறது. சுனாமியினுடைய பொருளாதாரப் பாதிப்பு கரையோரப் பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், டிட்வா இலங்கைத் தீவு முழுக்கவும் மிகப்பெரும் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகளை புயல் புரட்டிப்போட்டதோடு வெள்ளத்திலும் மூழ்கடித்துள்ளது. நூற்றுக்கணக்கான குளங்கள், ஏரிகள் உடைபட்டுள்ளன. பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கணக்கிட முடியாத அளவு கால்நடைகளை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. இப்பாதிப்பில் இருந்து இலங்கை மீண்டெழ, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மிக நீண்டகாலம் எடுக்கும் என்றே தெரிகிறது.
இந்நிலையில், இந்திய அரசு விரைந்து களமிறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை இந்திய அரசு தொடர்ந்து உதவிகளை வழங்கவேண்டும் எனவும்; பாதிக்கப்பட்ட குக்கிராமங்கள் வரைக்கும் உதவிகள் கிட்டுவதை இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.