தரணிவாழ் தமிழர்கள் அனைவருக்கும்... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்து

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-14 10:52 IST

சென்னை,

பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

"உலகம் மகிழும் உன்னத விழாதான் தமிழர்கள் கொண்டாடும் தைத் திருநாள் விழா!

பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான, பொன்னான விழா!

உழவரைப் போற்றும் உன்னதத் திருவிழா, தைத் திருவிழா, தமிழர் திருவிழா, பொங்கல் திருவிழா!

தமிழர்களுக்கு தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ணமாக பொங்கல் விழாவைத் தவிர வேறு விழா எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.

ஆகவே இந்த உண்மைக் காரணத்தினாலேயே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டதோடு, அதைத் தனிப்பெரும் தமிழ் நாளாக நாம் கொண்டாடி வருகிறோம்.

பொங்கல் வாழ்த்து பொதுமக்களிடையே செல்வாக்கும் பெற்றுவிட்டதற்குக் காரணம், பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும்.

இப்படிப்பட்ட இந்தக் கொண்டாட்ட விழா நாளில் தமிழ் மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்து மடலை அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும்.

வாழ்த்து என்றால், தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு தமிழர்க்கு இன்றுள்ள இழிவும், குறைபாடுகளும் நீங்கி, மனிதப் பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழ வேண்டும் என்பதுதான்.

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா.வின் மனித உரிமை மன்றம் சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவும் முன்வர வேண்டும். இனப்படுகொலை செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.

இயற்கை அன்னையின் கொடைக்கு விழா எடுப்போர் உலகில் தமிழர்களே! மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்றன்றோ சாத்தனார் பாடினார். அதனை வாரி வழங்கும் உழவர்கள் 'இயற்கைக்கும், நிலத்தை உழுதற்கும், கழனி விளைதற்கும் உற்றுழி உதவிடும் கால்நடைச் செல்வத்துக்கும் படையல் செய்து நன்றிப் பெருக்கு ஆற்றும் விழாவன்றோ பொங்கல் திருவிழா!

தரணிவாழ் தமிழர்கள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்