பொங்கல் தொடர் விடுமுறை.. 5 நாட்களில் 16 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்..!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.;

Update:2026-01-14 09:30 IST

சென்னை,

தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகை நாளை கொண்​டாடப்​படு​கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேலைவாய்ப்பு, உயர்கல்வி, தொழில், வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக தலைநகர் சென்னையில் வசித்து வரும் மக்களில் பெரும்பாலானோர் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதன்படி, கடந்த 9-ந் தேதி முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணங்களை மேற்கொள்ள தொடங்கி விட்டனர்.

சிறப்பு ரெயில்கள்

பொதுவாக மக்கள் பயணம் செய்ய முதலில் விரும்புவது ரெயில்களைத்தான். அந்த வகையில் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட்டுகள் 2 மாதங்களுக்கு முன்பே விற்றுத்தீர்ந்து விட்டன. ேமலும் பொங்கலையொட்டி ஏராளமான சிறப்பு ரெயில்கள் அறிவித்தபோதும் அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

அந்த வகையில், கடந்த 9 மற்றும் 10-ந் தேதிகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர், 11, 12, 13-ந் தேதிகளில் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் என 7 லட்சத்து 5 ஆயிரம் பேர் ரெயில்கள் மூலம் பயணம் செய்துள்ளனர். ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைக்காத ஏராளமான பயணிகள் முன்பதிவில்லா பெட்டிகளில் ஏறியதால் பல ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பயணிகள் இடையே தகராறு ஏற்பட்டதையும் காண முடிந்தது.

சிறப்பு பஸ்கள் - 6 லட்சம் பேர் பயணம்

இதேபோன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 38 ஆயிரத்து 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் விவரமாக, 12.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1010 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் 3,102 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,30,284 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆக, 09.01.2026 முதல் 12.01.2026 அன்று நள்ளிரவு 24.00 மணி வரை, மொத்தம் 11,372 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,88,780 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,56,977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே முன்பதிவு இல்லாத அரசு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் அதிகஅளவில் பயணிகள் திரண்டிருந்தனர். பெரும்பாலான பஸ்களில் இடம்பிடிக்க மக்களிடையே போட்டி நிலவியது.

இதற்கிடையே நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) வழக்கத்தைவிட அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்னி பஸ்

இதேபோன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆம்னி பஸ்களிலும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். அந்த வகையில் ஆம்னி பஸ்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் விவரம் வருமாறு:-

கடந்த 9-ந் தேதி ஆயிரத்து 230 ஆம்னி பஸ்களில் 49 ஆயிரத்து 200 பேர், 10-ந் தேதி ஆயிரத்து 100 பஸ்களில் 44 ஆயிரம் பேர், 11-ந் தேதி ஆயிரத்து 180 பஸ்களில் 47 ஆயிரத்து 200 பேர், 12-ந் தேதி ஆயிரத்து 450 பஸ்களில் 58 ஆயிரம் பேர், 13-ந் தேதி (அதாவது நேற்று) ஆயிரத்து 860 பஸ்களில் 74 ஆயிரத்து 400 பேர் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 800 பேர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.

18 லட்சம் பேர் பயணம்

ரெயில்கள், அரசு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட சதவீதம் மக்கள் தங்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதன்படி சுமார் 2 லட்சம் பேர் தங்கள் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மொத்தத்தில் ரெயில்கள், அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், சொந்த கார்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சுமார் 18 லட்சத்தை தாண்டி இதுவரை பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை கொண்டாட இன்றும் சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்ய இருப்பதால் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்