இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் , மயிலாடுதுறை , சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், கோவை , நீலகிரி , ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
வங்காளதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையில் 14.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சோழவரம்: நாரணம்பேடு, கோட்டைமேடு, பெரியகாலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.
அடையார்: பெசன்ட்நகர், மாளவியாஅவென்யூ 1 முதல் 4வது தெரு சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, எல்ஐசி காலனி, சுப்ரமணியம் காலனி, 1 முதல் 3வது தெரு, மாளவியா அவென்யூ, எம்.ஜி.ரோடு, ஆர்.கே.நகர் பிரதான சாலை, 1 முதல் 3வது குறுக்குத் தெரு ஆர்.கே.நகர், மருந்தீஸ்வர்நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்பிஐ காலனி, 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர், 1,5,6,வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர்.
தரமணி: டாக்டர்.அம்பேத்கர் புரட்சி நகர், கோவிந்தசாமி நகர், செம்பொன் நகர், ஜே.ஜே.நகர், பழைய காமராஜர் நகர், பெருந்தலைவர் காமராஜ் நகர், சந்தியப்பன் சாலை, எம்.ஜி.ஆர்.சாலை, ஒயர்லெஸ் குடியிருப்பு, ஷமீர் அலுவலகம்.
அரும்பாக்கம்: ஜெய் நகர் 4 முதல் 7 வரை, பிரகதீஸ்வரர் நகர், துரை பிள்ளை தெரு, இந்திரா காந்தி தெரு, கவிதா தெரு, பாஞ்சாலி அம்மன் தெரு, சஞ்சீவி தெரு, நேரு தெரு மற்றும் நகர், வீணா கார்டன், பி.வி.நகர், புதிய தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து எதிரொலி.. சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரெயில் சேவையில் மாற்றம்
திருவள்ளூரில் சரக்கு ரெயில் தீப்பிடித்து எரிந்த விபத்து காரணமாக, அவ்வழியாக செல்லும் ரெயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை செல்லவேண்டிய பல ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
இந்த நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று இரவு புறப்பட வேண்டிய ரெயில்கள் அரக்கோணம் மற்றும் காட்பாடியில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு
1. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
2. சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 9.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்
3. சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்ல வேண்டிய காவேரி ரெயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
4. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.