இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025

Update:2025-07-13 09:50 IST
Live Updates - Page 2
2025-07-13 12:16 GMT

தாம்பரம் அருகே 3 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதல்

சென்னை வண்டலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வருகின்ற சாலையில் வாகனங்கள் பரபரப்பாக சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில் பெருங்களத்தூர் ஏரிகரை சிக்னல் அருகே கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பஸ் ஒன்று கார் மீது மோதியது. இதனால் அந்த கார் அதற்கு முன் இருந்த மற்றொரு காரினை மோதியது.

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் மோதியதால் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்ததால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த மோதல் காரணமாக கார் டிரைவருக்கும் அரசு பஸ் டிரைவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், போலீசாரிடம் பஸ் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டதாக டிரைவர் தெரிவித்தார். ஆனால் அந்த பஸ் அங்கிருந்து புறப்படும் போது பிரேக் பிடித்ததால் டிரைவரின் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்காலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025-07-13 11:28 GMT

ஜூலை 24-ல் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் நிறைவுபெறுகிறது.

இந்தநிலையில் ஜூலை 24 முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை 2-ம் கட்ட பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார். புதுக்கோட்டையில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.

2025-07-13 10:54 GMT

தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று என்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, சேலம், நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-07-13 10:49 GMT

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காளம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2025-07-13 10:48 GMT

பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு

ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான் அரசு. இந்த வழக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2025-07-13 10:45 GMT

டீசல் டேங்கர் ரெயில் மீண்டும் தீ

திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரெயில் தீ விபத்து ஏற்பட்டது. முழுமையாக தீயை அணைத்த பிறகும், மீண்டும் டீசல் கசிவு ஏற்பட்டு மீண்டும் தீ எரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2025-07-13 09:50 GMT

ஆக்கி போட்டிகளில் இருந்து விலகும் பாகிஸ்தான்?

வீரர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை மற்றும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய போர் சூழ்நிலை காரணமாக, வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் குறையும் என கூறப்படுகிறது.

2025-07-13 09:48 GMT

தமிழ் சினிமா சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் நடைபெற்ற இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில், சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த கார் ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் திடீரென உயிரிழந்தார். ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

2025-07-13 09:45 GMT

உயிரை மாய்த்துக் கொண்ட மாடல் அழகி

கருப்பழகி பிரிவில் உலகழகி பட்டம் பெற்ற புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சல், பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2025-07-13 09:43 GMT

ரெயில் புறப்படும் இடம் திடீர் மாற்றம் - பயணிகள் வாக்குவாதம்

திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ரெயில்களின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 1 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூர் நோக்கி செல்ல வேண்டிய வெஸ்ட் கோஸ்ட் ரெயில், அரக்கோணத்தில் புறப்படும் என திடீர் அறிவிப்பால் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து அரைமணி நேரத்தில் எப்படி அரக்கோணம் செல்ல முடியும்? என பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்