வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் ஒருவர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.;

Update:2025-04-12 08:45 IST

கோப்புப்படம் 

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது. இந்த மலையில் உள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ரமேஷ் (42 வயது) என்பவர் தனது நண்பர்கள் 5 பேருடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, நேற்று முன்தினம் இரவு கோவில் அடிவாரம் வந்துள்ளார்.

பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறிய, ரமேஷ் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கீழே 6-வது மலையில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கடும் குளிர் காரணமாக திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதே இடத்தில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதைப்பார்த்ததும், அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர். இதுகுறித்து, ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்