மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் எப்போது ? வெளியான அறிவிப்பு
இதுவரை 1.14 கோடி பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள்.;
கோப்பு படம்
சென்னை,
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்தவகையில், அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளிருக்கு இந்த உரிமைத் தொகையை வழங்க திட்டமிட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
இதில் மகளிர் உரிமைத் தொகை வேண்டி இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் அளித்த மனுக்கள் தான் பெரும்பான்மை. நவம்பர் 15 வரை நடைபெற்ற இந்த முகாம்களில், உரிமைத் தொகை கோரி புதிதாக பெறப்பட்ட விண்ணப்பங்களை வருவாய்த் துறையினர் தீவிரமாக களஆய்வு செய்தனர். இந்த பணி நவம்பரில் முடிவடையும் எனவும் முகாம்களில் விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் சட்டப்பேரவையில் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, கடந்த 27 மாதங்களாக ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம் 12 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும் பலருக்கு வழங்கப்பட உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் டிச.12ம் தேதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.28 லட்சம் பேர் கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பத்திற்கும் நிலையில் இதுவரை 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது