த.வெ.க. பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கு: டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு கடந்த 1-ந் தேதி கரூருக்கு வந்தது.;

Update:2025-12-04 13:14 IST

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு கடந்த 1-ந் தேதி கரூருக்கு வந்தது.

இந்த குழுவினர் நேற்று முன்தினம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 35-க்கும் மேற்பட்டவர்களிடம் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா உள்ளிட்டோர் ஆஜராகி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான தங்களது தரப்பு விளக்கங்களை அளித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரத்துக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவங்கள் குறித்து எடுத்துக்கூறினர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆய்வை தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் புறப்பட்டு, கரூரில் பிரசாரம் செய்வதற்காக த.வெ.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் த.வெ.க. சார்பில் முதலில் பிரசாரம் நடத்த அனுமதி கேட்கப்பட்ட லைட் ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை, மனோகரா கார்னர் ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்து நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கி கூறினர்.

இதனைத்தொடர்ந்து கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு கண்காணிப்பு குழுவினர் சென்றனர். அப்போது கரூர் மண்மங்கலம் காந்தி நகரை சேர்ந்த சிவா, புதிய திராவிட கழகம், கரூர் மாவட்டம் ஈசநத்தம் பகுதியை சேர்ந்த வீரராஜ், கரூர் மாவட்ட ஆதி தமிழர் பேரவை சார்பில் மாவட்ட செயலாளா், திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த சண்முகம் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு குழுவினரிடம் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கண்காணிப்பு குழுவினர் அவர்களது கருத்துகளை பதிவு செய்து கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை பரிசோதனை செய்த டாக்டர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சிபிஐ அலுவலகத்தில் கரூர் அரசு டாக்டர்கள் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்