வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் அறிவிப்பு

அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.;

Update:2025-11-02 10:16 IST

சென்னை,

வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை பகுதி கடந்த அக்டோபர் 26-ந் தேதி புயலாக வலுப்பெற்றது. ‘மோந்தா’ என பெயரிடப்பட்டு இருந்த இந்த புயல் சென்னை அருகே கரையை கடக்கக்கூடும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே புயல் நகர்ந்து சென்றது. கடந்த அக்டோபர் 28-ந்தேதி மாலை 6 மணியளவில் காக்கிநாடா அருகே புயல் கரையை கடந்து சென்றது.

அப்போது ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை கிடைக்க பெறவில்லை. இந்நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் இன்று அறிவித்து உள்ளது.

தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மேல் காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் இன்று கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மியான்மர் நோக்கி நகரும் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்திற்கு மழை பாதிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்