6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாகவும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட்டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதே சமயம் மேற்கு திசை காற்றின் போக்கு காரணமாக, வெப்பம் அதிகரித்து, வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.