தமிழ்நாட்டில் இயல்பை விட குறைவாக பெய்த வடகிழக்குப் பருவமழை
நவம்பர் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.;
சென்னை,
கடந்த சில வாரங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை விடைகொடுத்து தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டில் 23 செ.மீ. மழை பெய்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்சமாகும்.
அதாவது, வடகிழக்கு பருவமழை சிறப்பாகவே தொடங்கியது எனலாம். ஆனால் நவம்பரில் மழை திடீரென குறைந்தது. நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் வெறும் 1.5 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது. நவம்பர் மாத சராசரி மழை அளவு 18 செ.மீ. என்பதால், இது மிகவும் குறைவு என்று சொல்லப்படுகிறது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 3 சதவீத குறைவாகவே பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை 15 சதவீத குறைவாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 447.9 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 380.3 மிமீ மழை மட்டுமே பொழிந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் இரண்டாம் பாதியில் நல்ல மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக கூறிய சுயாதீன வானிலை ஆய்வாளரான 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்திரன், வடகிழக்கு பருவமழையின் போது சில நாட்கள் மழை குறைவது சாதாரண விஷயம் தான். இந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் பலம் பெற்று மழை பெய்யும்.
நவம்பரின் இரண்டாவது பாதி பருவமழைக்கு மிகச்சிறந்த சூழ்நிலை கொண்டுள்ளது. வரும் வாரங்களில் மீண்டும் பருவமழை தீவிரமடையும் முதல் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட மழை பற்றாக்குறை இரண்டாம் பாதியில் சரியாகி விடும். சென்னையைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் சராசரியாக 11 நாட்களுக்கு மழை இருக்கும் என்றார்.