சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் டிட்வா புயல் நிலவி வருகிறது;

Update:2025-11-30 14:39 IST

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் வடக்கு திசையில் நகர்ந்துள்ளது. புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளில், கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்கால் கிழக்கு - வடகிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதாரண்யத்திற்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

அப்போழுது புயலுக்கும், வடதமிழக-புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 70 கிலோ மீட்டராக இருந்தது. இப்புயலானது அடுத்த 24 மணிநேரத்திற்கு வடதமிழகம் - புதுவை கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகரக்கூடும். அவ்வாறு நகரும்போது வடதமிழகம்- புதுவை கடற்கரையிலிருந்து குறைந்தபட்ச தூரமானது இன்று 30ம் தேதி பிற்பகலில் 60 கிலோமீட்டராகவும், மாலை 30 கிலோ மீட்டராகவும் இருக்கக்கூடும்.

இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் ஒருசில இடங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும்.

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், வடதமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டிய மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்