அசாம் மாநிலத்திற்கான 1 ரூபாய் வடகிழக்கு முழுவதும் பயன் தரும்: முதல்-மந்திரி பிஸ்வா
வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட அசாமில் முதலீடு செய்ய வாருங்கள் என டாவோஸ் மாநாட்டில் முதல்-மந்திரி பிஸ்வா பேசினார்.;
டாவோஸ்,
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது. இதன்படி, நேற்று தொடங்கிய இந்த மாநாடு வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்முறையாக அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டார்.
அவர் பேசும்போது, குறைகடத்தி தொடர்பாக 20-ந்தேதி டாடா நிறுவனத்துடன் இணைந்து கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். டாடாவால் அசாமில் சுற்றுச்சூழல் மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.
அசாமில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் நிறைய முதலீடுகளை நாங்கள் செய்துள்ளோம். இதனால், சுற்றுலா துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. அசாம், வடகிழக்கு மாநிலங்களில் இருந்து தனித்து இருக்கவில்லை. நாங்கள் அவற்றுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.
அசாமுக்கு டாடா நிறுவனத்தின் குறைகடத்தி தொழிற்சாலை கொண்டு வரப்பட்டால், அது அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் பயன்படும். அதற்கேற்ப எங்களிடம் சமவெளி நிலங்கள் உள்ளன என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவு வாயிலாக அசாமின் கவுகாத்தி நகரம் அமைந்துள்ளது. அதனால், மற்ற மாநிலங்களை விட தொழில்களை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நான் அசாமுக்கு 1 ரூபாய் கொண்டு வருகிறேன் என்றால், அந்த 1 ரூபாய் ஆனது தானாகவே அனைத்து வடகிழக்கு மாநிலங்களுக்கும் சென்று சேர்ந்து விடும் என கூறினார். வளர்ந்து வரும் மாநிலம் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட அசாமில் முதலீடு செய்ய வாருங்கள் என அப்போது கூறினார்.