14-ம் போப் லியோவுடன் இஸ்ரேல் ஜனாதிபதி நேரில் சந்திப்பு
ஹெர்ஜாக் கேட்டு கொண்டதன் பேரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறியுள்ளார்.;
ரோம்,
இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜாக் இன்று 14-ம் போப் லியோவை நேரில் சந்தித்து பேசினார். இதற்காக, வாகன அணிவகுப்பு மற்றும் பலத்த பாதுகாப்புடன் அபோஸ்தலிக் அரண்மனைக்கு ஹெர்ஜாக் சென்று சேர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக்கின் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், பணய கைதிகளை விடுவிப்பது, யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போர் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் கிறிஸ்தவ சமூகத்தினரை பாதுகாப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவதற்கான முயற்சிகளை பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளது.
போப் அழைத்ததன்பேரில் இந்த பயணம் அமைந்துள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. ஆனால், ஹெர்ஜாக் கேட்டு கொண்டதன் பேரில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது.
21 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், காசா பகுதியில் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.