அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து - காரணம் என்ன?
வருகிற 14-ந்தேதிக்குள் 10 சதவீத விமான சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.;
வாஷிங்டன்,
அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளுக்கான செலவின மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், அரசு நிர்வாகம் கடந்த மாதம் முதல் முடங்கியது. இதனால் அமெரிக்க அரசுக்கு சொந்தமான விமான நிறுவன பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, பலரும் கட்டாய விடுப்பில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், விமானங்களை இயக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ உள்ளிட்ட 40 நகரங்களில் 10 சதவீத விமான சேவை நிறுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை மந்திரி அண்மையில் தெரிவித்திருந்தார். பின்னர், இதில் திருத்தம் செய்யப்பட்டு முதற்கட்டமாக 4 சதவீதம், அதாவது 500 விமான சேவை ரத்துசெய்யப்பட்டது. மிகவும் குறுகிய காலத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மேலும், அரசு நிர்வாக செலவை ஈடுகட்டுவதற்கான மசோதா தற்போதைக்கு நாடாளுமன்றத்தில் நிறைவேற சாத்தியமில்லை என்பதால், வருகிற 14-ந்தேதிக்குள் 10 சதவீத விமான சேவை ரத்துசெய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1,800 விமானங்கள் ரத்துசெய்யப்படுவதுடன், 2 லட்சத்து 68 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.