கோழைத்தனமான தாக்குதல்- இஸ்ரேலுக்கு கத்தார் கண்டனம்
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது;
காசாவில், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் விமானப்படை மூலமும், தரை வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இச்சூழ்நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால், அந்நகரில், வானை முட்டும் அளவுக்கு புகை எழும்பியது. தாக்குதலை கத்தார் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். இந்த நிலையில்,
ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் உறுப்பினர்கள் வசிக்கும் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கோழைத்தனமான இஸ்ரேலிய தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தக் குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதாகும். மேலும் இது கத்தார் குடிமக்கள் மற்றும் கத்தாரில் வசிப்பவர்களின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.