தாய்லாந்து- கம்போடியா அமைதி பேச்சுவார்த்தை: சண்டை நிறுத்தம் ஏற்படுமா?

டிரம்ப் தலையீட்டால் தாய்லாந்து-கம்போடியா நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்;

Update:2025-07-28 06:09 IST

எல்லை மோதல் காரணமாக புத்த துறவிகள் தாய்லாந்தில் ஒரு குகையில் பதுங்கியிருந்த காட்சி

பாங்காக்,

தாய்லாந்தும், கம்போடியாவும் சுமார் 800 கிலோ மீட்டர் நில எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதனால் இரு நாடுகள் இடையே அடிக்கடி எல்லை பிரச்சினை நிலவுகிறது. குறிப்பாக கம்போடியாவின் கட்டுப்பாட்டில் தா மியூன் தோம் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலுக்கு தாய்லாந்தும் உரிமை கோருகிறது.இதனால் கடந்த மே மாதம் தாய்லாந்தின் சுரின் மற்றும் கம்போடியாவின் ஓடர் மீன்ச்சி மாகாண எல்லையில் மோதல் வெடித்தது. அப்போது இரு நாடுகளின் ராணுவம் மோதிக் கொண்டதில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதனையடுத்து தாய்லாந்தின் காய்கறி, பழங்கள் இறக்குமதிக்கு கம்போடியா தடை விதித்தது. இதற்கு பதிலடியாக தாய்லாந்தும் கம்போடியா உடனான எல்லையை மூடியது. மேலும் தனது தூதரை திரும்ப பெற்ற தாய்லாந்து அங்கிருந்து கம்போடியா தூதரையும் வெளியேற உத்தரவிட்டது.இதன் காரணமாக இரு நாடுகள் இடையேயான மோதல் மேலும் தீவிரம் அடைந்தது. கடந்த 4 நாட்களாக நடைபெறும் இந்த மோதலில் இரு தரப்பிலும் இதுவரை 33 பேர் பலியாகினர். சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் எல்லை பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து கம்போடியா பிரதமர் ஹன் மானெட் நிபந்தனையற்ற போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் தாய்லாந்து பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாஅதனை நிராகரித்தார்.இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளின் தலைவர்களிடமும் தனித்தனியாக போனில் அழைத்து பேசினார். அப்போது பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இரு நாடுகளுடனும் இனிமேல் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள போவதில்லை என டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து இரு நாடுகளும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம் இரு நாடுகளும் பயன்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கம்போடியா பிரதமர் ஹன் மானெட் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையே மலேசியாவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இரு நாட்டு தலைவர்களையும் அமைதி பேச்சு நடத்த அழைப்பு விடுத்தார். இதை ஏற்று அதை ஏற்று தாய்லாந்து பொறுப்பு பிரதமர் பும்தம் வெச்சாயாசாய் மற்றும் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் இருவரும் இன்று மலேஷியாவில் சந்திக்க உள்ளனர். இதனால் கம்போடியா - தாய்லாந்து இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்