சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை இறக்கி இடதுசாரி தவறிழைத்து விட்டது: நடிகர் பிரகாஷ் ராஜ்

சசி தரூரை சிறந்த முறையில் பேச கூடிய மலையாளி என்றும் ராஜதந்திரி என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டு உள்ளார்.

Update: 2024-04-22 12:50 GMT

திருவனந்தபுரம்,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதன்படி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இதில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறும். கேரளாவில் திருவனந்தபுரம் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக சசி தரூர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் பலமுறை இடதுசாரி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர் என நன்கு அறியப்படுபவர். அவர், சசி தரூரை இன்று புகழ்ந்து பேசியுள்ளார். சிறந்த முறையில் பேச கூடிய மலையாளி என்றும் ராஜதந்திரி என்றும் தரூரை குறிப்பிட்டு உள்ளார்.

அவருடைய பேச்சை சர்வதேச அரசியல்வாதிகள் கூட கவனிப்பார்கள் என கூறிய பிரகாஷ் ராஜ், பா.ஜ.க.வின் வலையில் இடதுசாரி கட்சி விழுந்திருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

ஏனெனில், இரு மதசார்பற்ற கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் விருப்பம். இதனால், ஓட்டுகளை பிரித்து, அதன்மூலம் அவர்கள் பயனடைவார்கள் என்று கூறியுள்ளார்.

அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, இடதுசாரி வேட்பாளரை எனக்கு நன்றாக தெரியும். அவர் அன்பான மனிதர். நல்ல அரசியல்வாதி. ஆனால், தரூருக்கு எதிராக இடதுசாரி கட்சி வேட்பாளரை நிறுத்தியிருக்க கூடாது என்றே நான் நினைக்கிறேன் என்றார்.

அரசியல் கட்சிகளை விட நாட்டின் நலனை பற்றி சிந்திப்பதே முக்கியம். கடந்த 15 ஆண்டுகளில் தரூர் ஆற்றிய பணிகளை நாம் கவனிக்காமல் தவற விடமுடியாது. அதனால், திருவனந்தபுரம் தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் அவரை தோல்வியடைய விட்டு விட கூடாது என்று வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்