386-வது பிறந்த நாள் இன்று.. வணக்கம் சென்னை!

சென்னை மாநகரம் முழுவதும் இன்று வானுயர கட்டிடங்கள் நிமிர்ந்து நின்றாலும், ஆங்காங்கே பாரம்பரிய கட்டிடங்களும் கலைநயம் மாறாமல் நயமாக கடந்த கால வரலாற்றை பறைசாற்றி நிற்கின்றன.;

Update:2025-08-22 00:00 IST

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்... அந்த பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் தலைநகர் சென்னைக்கும் முக்கிய பங்கு உண்டு. இன்றைக்கு தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 8 கோடி பேரில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில்தான் வசித்து வருகின்றனர்.

இவ்வளவு பேர் குறிப்பிட்ட இடத்தில் நெருக்கமாக வாழ்வதற்கு காரணம், வேலை. இப்படி, வேலை தேடி தலைநகர் சென்னையில் கால் வைத்த யாரும், ஒருபோதும் கைவிடப்பட்டதாக வரலாறு இல்லை. அந்த அளவுக்கு 'அன்னை' போல் இந்த 'சென்னை' மாநகரம், நம்பி வந்தவர்களுக்கு எல்லாம் வாழ்வளித்து வருகிறது.

இன்றைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வழிதேடி வந்தவர்களுக்கு வாழ்வு தரும் சென்னை, அன்றைக்கு கடல் கடந்து வந்த வெளிநாட்டவர்களையும் அந்நியர்கள் என்று பாராமல் வாழ வைத்திருக்கிறது.

நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பக்கங்களை புரட்டினால், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று நம்மை ஆண்டுவிட்டு சென்றவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியும்.

இன்றைக்கு சென்னை மாநகரம் முழுவதும் பெரிய.. பெரிய.. கட்டிடங்கள் வானுயர மிடுக்காக நிமிர்ந்து நின்றாலும், ஆங்காங்கே பாரம்பரிய கட்டிடங்களும் கலைநயம் மாறாமல் நயமாக கடந்த கால வரலாற்றை பறைசாற்றி நிற்பதை காண முடிகிறது.

இப்படி பழையன, புதியன கலந்த கலவையாக இருக்கும் சென்னை மாநகரம் இன்றைக்கு (ஆகஸ்ட் 22) தனது 386-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என்று காலவோட்டத்தில் பெயர்கள் மாறினாலும், இன்றைக்கு சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. இந்தியாவின் 4-வது பெரிய நகரம், உலகின் 31-வது பெரிய நகரம் என்ற சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது,1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. சென்னப்ப நாயக்கர் என்பவரின் மகன் வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனியை தொடங்குவதற்காக பிரான்சிஸ்டே என்பவர் இப்போதைய புனித ஜார்ஜ் கோட்டை இருக்கும் நிலத்தை எழுதி வாங்கினார். வெங்கடப்ப நாயக்கரின் ஆசைப்படி, தந்தையின் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு, மதராஸ் பட்டணம் என்ற பெயர் சென்னப் பட்டணமாக மாற்றப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கு சென்னையில் வாழும் ஒரு கோடி மக்களுக்கும் பெற்ற தாய் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், செவிலித்தாய் அனைவருக்கும் சென்னைதான்.

ஆனால், இந்த அன்னையான சென்னையை நாம் எந்த அளவுக்கு போற்றி வருகிறோம் என்று பார்த்தால், வேதனைதான் மிஞ்சி நிற்கிறது.

1935-ம் ஆண்டு வரை தெளிந்த நீராக ஓடிய கூவம் ஆறு இன்றைக்கு, கழிவுநீர் கால்வாயாக மாறிப்போய் இருக்கிறது. அடையாறு, பக்கிங்காம் கால்வாயின் நிலையும் இதேதான். மக்கள் பெருக்கம் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும், வெளிநாடுகளில் இதுபோன்று நகர்ப்புறங்களில் உள்ள நீர்நிலைகளும் பராமரிக்கப்பட்டு பாரம்பரியம் காக்கப்பட்டு வருவதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

அதுமட்டுமல்லாது, பருவமழை காலங்களில் வெள்ளநீர் தேக்கத்தால் மாநகரமே ஸ்தம்பித்து விடுகிறது. இயற்கையின் கொடையான மழை ஏன் வருகிறது? என்று நினைக்கும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிடுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் மழைநீர் வடிகால்வாய் முறையாக இல்லாததே. அதற்கான தீர்வு குறித்தும் ஆராய வேண்டும். அந்த வகையில், நமக்கு வாழ்வளித்துவரும் ‘அன்னை' மாநகரான ‘சென்னை' மாநகரை மீட்டெடுக்க இந்நன்நாளில் உறுதியேற்போம். 

Tags:    

மேலும் செய்திகள்