இன்று சென்னை தினம்.. மின்சார ரெயில்களுக்கு முன்னோடியான டிராம் வண்டிகள்
ஒரு காலத்தில் சென்னையில் தங்க சாலை, கடற்கரை சாலை, பாரிஸ் கார்னர், மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் டிராம் வண்டிகள் ஓடின.;
இன்றைக்கு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில், பொது போக்குவரத்துக்கு பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை என பல்வேறு நவீன வசதிகள் இருக்கின்றன. ஆனால், அன்றைக்கு மாட்டு வண்டிதான் போக்குவரத்து வாகனம். பெரும்பாலான இடங்களுக்கு மக்கள் கால்நடையாகவே சென்று வந்தனர்.
அந்த நேரத்தில், 1895-ம் ஆண்டு மெட்ராஸ் எலெக்ட்ரிசிட்டி சிஸ்டம் என்ற கம்பெனி, டிராம் வண்டி சேவையை தொடங்கியது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நத்தை போல் ஊர்ந்து செல்லும் இந்த வாகனங்கள் தான் அப்போது சென்னையில் வலம் வந்தன. தங்க சாலை, கடற்கரை சாலை, பாரிஸ் கார்னர், மவுண்ட் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் டிராம் வண்டிகள் ஓடின. சாலைகளில் அமைக்கப்பட்ட மின்சார ஒயர்களை தொட்டுக் கொண்டு இயங்கிய டிராம் வண்டிகள் தான் மின்சார ரெயில்களுக்கு முன்னோடி. அப்போது, சென்னையில் 100 டிராம் வண்டிகள் வரை இயங்கி இருக்கின்றன.
இந்த வண்டிகளை நிறுத்தி வைப்பதற்கான பணிமனை வேப்பேரியில் உள்ள தினத்தந்தி அலுவலகம், பெரியார் திடல் பகுதியில் இருந்துள்ளது. 1931-ம் ஆண்டு ரெயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, பயன்பாடு குறைந்ததால், 1953-ம் ஆண்டு டிராம் சேவை நிறுத்தப்பட்டது.