சென்னையின் முக்கிய அடையாளங்கள்... பெயர் வந்தது எப்படி?

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வியாபாரம் செய்வதற்கான துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியாட்கள் குடியமர்த்தப்பட்ட இடம்தான் இன்றைய வண்ணாரப்பேட்டை.;

Update:2025-08-22 00:00 IST

வண்ணாரப்பேட்டை

ஆங்கிலேயர்களின் வியாபாரம் பெரும்பாலும் துணிகளை சார்ந்ததாகவே இருந்தது. அதனால், ஆடை நெசவாளர்களையும், நூல் நூற்பவர்களையும் அருகிலேயே வைத்துக்கொண்டனர். அன்று 50 நெசவாளர் குடும்பங்கள் தங்கிய தெரு, நெசவாளர் தெரு என்றே அழைக்கப்பட்டது. தற்போதும் அது நைனியப்பன் தெரு என்ற பெயரோடு ஜார்ஜ் டவுனில் இருக்கிறது. திருவொற்றியூர் அருகேயுள்ள காலடிப்பேட்டையில், அன்றைய கவர்னர் காலட், பல நெசவாளர் குடும்பங்களை குடியேற வைத்து, தனது பெயரையே சூட்டினார். அதுவே, பின்நாளில் காலடிபேட்டை ஆனது. மேற்கொண்டும், நிறைய நெசவாளர்கள் தேவைப்பட்டதால், அவர்களை ஒரு காலி இடத்தில் குடியமர்த்தி அதற்கு நெசவாளர் நகர் என்று பெயரிட்டு அழைத்தார். அதுவே இன்றைய சிந்தாதிரிப்பேட்டை ஆகும்.

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் விற்பனை செய்யும் துணிகள், கப்பலில் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு கொண்டுவரப்பட்டதால், வியாபாரம் செய்யும் முன் துணிகளை புதிதுபோல் வெளுத்து கொடுப்பதற்கு என வேலையாட்களை வைத்திருந்தனர். அவர்களை குடியேற்றிய இடம் வாஷர்மென்பெட். அதுதான் இன்றைய வண்ணாரப்பேட்டை.

வாலாஜா ரோடு பெயர் காரணம்!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் அரண்மனை 17-ம் நூற்றாண்டில் கர்நாடக வாலாஜா நவாப் தங்குவதற்காக கட்டப்பட்டு, தற்போது வருவாய் துறை அலுவலகமாக விளங்குகிறது. சேப்பாக்கம் அரண்மனை கர்நாடக அரசின் ஆளுமையில் பல ஆண்டுகள் இருந்தது. அதற்கு அடையாளமாக வாலாஜா மசூதி, வாலாஜா ரோடு என்று இன்றும் பெயர் இருக்கிறது. நவாப் இறந்த பிறகு சேப்பாக்கம் அரண்மனையை ஆங்கிலேயர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.

‘சால்ட் கோட்டர்ஸ்' எப்படி வந்தது?

ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சிக்கான அடித்தளத்தை ஆழமாக வேரூன்ற செய்த பிறகு, வருமானத்தை அதிகரிக்க திட்டம் தீட்டினர். மக்கள் காற்று, தண்ணீருக்கு அடுத்து, அதிகம் உபயோகித்தது உப்பைத்தான். எனவே, உப்புக்கு வரி விதித்தனர். அந்த நேரத்தில், சென்னையில் ‘சால்ட் கோட்டர்ஸ்' என்ற இடத்தில் உப்பை சேமித்து வைத்தனர். அந்த இடம் இன்றும் நினைவுச் சின்னமாக இருக்கிறது.

வால் டாக்ஸ் ரோடு பெயர் சுவாரஸ்யம்!

சென்னையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோட்டைக்கும், சட்டக் கல்லூரிக்கும் இடையே தெலுங்கர்கள், தமிழர்கள் வாழ்ந்த பகுதியான கருப்பர் நகரத்தை சுற்றி பாதுகாப்பு மதில் சுவர் ஒன்று கட்ட திட்டமிடப்பட்டது. அதற்காக அங்கு வாழும் மக்களிடமே வரிப்பணம் வசூலிக்க ஆங்கிலேய அரசாங்கம் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கியது. அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வால் டாக்ஸ் (சுவர் வரி) வசூலிக்க முடியவில்லை. என்றாலும், சென்டிரல் ரெயில் நிலையம், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்துக்கு இடையே பேசின்பிரிட்ஜ் நோக்கி செல்லும் சாலைக்கு ‘‘வால் டாக்ஸ் சாலை’’ என்ற பெயர் வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்