2-வது டெஸ்ட்: கில் இல்லையென்றால் அந்த தமிழக வீரரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - கும்ப்ளே
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி 22-ம் தேதி தொடங்க உள்ளது.;
கொல்கத்தா,
இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன் இலக்கை கூட விரட்டிப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 93 ரன்னில் அடங்கி படுதோல்வி அடைந்தது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது.
முன்னதாக முதல் டெஸ்டின் 2-வது நாள் ஆட்டத்தின்போது இந்திய கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக பாதியில் வெளியேறினார். அத்துடன் முதல் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து சுப்மன் கில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து சுப்மன் கில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் 2-வது போட்டிக்குள் முழு உடற்தகுதியை எட்டி விடுவாரா இல்லையா? என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.
இந்நிலையில் 2-வது போட்டியில் ஒருவேளை சுப்மன் கில் விளையாடவில்லை என்றால் அவருக்கு மாற்று வீரராக யார் விளையாட வேண்டும்? என்பது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “அடுத்த டெஸ்டுக்கு சுப்மன் கில் உடற்தகுதி பெறுவார் என்று நிச்சயமாக நம்புவோம். ஒருவேளை அவர் இல்லையென்றால் சாய் சுதர்சன் அணியில் இடம்பெற வேண்டும்” என்று கூறினார்.