டெஸ்ட் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜடேஜா மாபெரும் சாதனை
இந்த சாதனை பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.;
கவுகாத்தி,
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. செனுரன் முத்துசாமி சதம் (109 ரன்) அடித்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆனை தவிர்க்க 290 ரன்கள் தேவையாக இருந்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 58 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
அடுத்து இந்தியாவுக்கு பாலோ-ஆன் வழங்காமல் 288 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 78.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 94 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 549 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி உள்ளது.
இந்த இன்னிங்சில் ஜடேஜா கைப்பற்றிய 4 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 52 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50+ விக்கெட்டுகள் கைப்பற்றிய 5-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார்.
அந்த பட்டியல்:
1. அனில் கும்ப்ளே - 84 விக்கெட்டுகள்
2. ஜவகல் ஸ்ரீநாத் - 64 விக்கெட்டுகள்
3. ஹர்பஜன் சிங் - 60 விக்கெட்டுகள்
4. அஸ்வின் - 57 விக்கெட்டுகள்
5. ஜடேஜா - 52 விக்கெட்டுகள்