2025-ல் கவலைகளை நீக்கி இனிய அனுபவங்களை வழங்கிய பண்டிகைகள்
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே பிரவேசித்தார்.;
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்கள் இறைவனின் அருளாசியை பெறுவதற்காக அவரவரின் சமயம் சார்ந்த வழிபாடுகளை பாரம்பரிய வழக்கப்படி மேற்கொள்கிறார்கள். இந்த வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளை ஒற்றுமையாக முன்வைக்கும் வடிவமாக திருவிழாக்கள், பண்டிகைகள் அமைந்துள்ளன. கடவுள் வழிபாடு மட்டுமின்றி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ளவும், உறவுகளை வலுப்படுத்தவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கலாசாரத்தைப் போற்றவும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடனும் மனநிறைவோடும் நேரத்தைச் செலவிடவும் இப்பண்டிகைகள் நல்வாய்ப்பை வழங்குகின்றன.
அவ்வகையில் 2025-ம் ஆண்டில் கவலைகளை நீக்கி மனதிற்கு இனிய அனுபவங்களை வழங்கிய முக்கிய பண்டிகைகள், ஊர்கூடி நடத்திய திருவிழாக்கள் என மனதில் நீங்கா இடம்பெற்ற நிகழ்வுகளை பார்ப்போம்.
ஜனவரி 10 (வைகுண்ட ஏகாதசி)
பெருமாளை வழிபடுவதற்கு உகந்த நாள் ஏகாதசி தினம் ஆகும். அதிலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசியானது, 'மோட்சத்திற்கான ஏகாதசி' என்று போற்றப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதுடன், சொர்க்கவாசல் வழியாக சென்று தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. ஜனவரி 10ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில், நம்பெருமாள் ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொண்டை ஆகிய சிறப்பு அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வெளியே பிரவேசித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் `ரங்கா, ரங்கா' என பக்திப் பரவசத்துடன் கோஷம் எழுப்பி பகவானை வழிபட்டனர். பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று பகவானை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
ஜனவரி 13-பிப்ரவரி 26 (மகா கும்பமேளா)
144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு, உத்தர பிரதேசத்தில் ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதிவரை 45 நாட்கள் கோலாகலமாக நடந்தது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டனர். 66 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
ஜனவரி 14 (பொங்கல் பண்டிகை)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. பொது வெளியில் மக்கள் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் இந்த திருவிழா, சமத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதாக அமைந்தது. பொங்கல் திருநாளில் கோவில்களிலும் மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து இறைவனை தரிசனம் செய்தனர்.
ஜனவரி 29 (தை அமாவாசை )
முன்னோர்களுக்கு திதி கொடுக்க உகந்த நாளான தை அமாவாசை நாளில் மக்கள் புனித நீர்நிலைகளில் நீராடி, நிதி கொடுத்து முன்னோர்களின் ஆசியை வேண்டி பிரார்த்தனை செய்தனர். குறிப்பாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பிப்ரவரி 11 (தைப்பூசம்)
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானுக்கு உன்னதமான விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். சிலர் பாத யாத்திரை மேற்கொண்டும், காவடி எடுத்து வந்தும் முருகனை வழிபட்டனர். தைப்பூசம் அன்று, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற சன்மார்க்கத்தை ஏற்படுத்திய வள்ளலாரையும் வழிபட்டனர்.
பிப்ரவரி 26 (மகா சிவராத்திரி)
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா நன்மைகளையும் இது ஒரு சேர வழங்கிவிடுவதால் இது மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. எனவே மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட மகா சிவராத்திரியன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானை பூஜிப்பது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா 26.2.2025 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மார்ச் 31 (ரம்ஜான்)
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் பெருநாள் சிறப்பு தொழுகையில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து மகிழ்ந்தனர்.
ஏப்ரல் 11: பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென் மாவட்டங்களில் ஏராளமான மக்கள் குல தெய்வ கோவில்களில் பொங்கலிட்டு வழிபட்டனர். முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் முருகப்பெருமானை வழிபட்டனர்.
ஏப்ரல் 20 (ஈஸ்டர் பண்டிகை)
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகை ஈஸ்டர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணத்திற்குப் பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் இந்த கொண்டாட்டமானது, உயிர்ப்பு ஞாயிறு, ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் கொண்டாடும் விதமாக, தேவாலயங்களில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் ஈஸ்டர் பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஜூன் 9 (வைகாசி விசாகம்)
முருகன் கோவில்களில் விசாகத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திர நாளன்று சுவாமியை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் முருகன் கோவில்களில் நடைபெற்ற விசாகத் திருவிழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வழிபட்டு மனநிறைவு அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஆகஸ்ட் 16 (கிருஷ்ண ஜெயந்தி)
மகா விஷ்ணுவின் முக்கிய அவதாரமான கிருஷ்ணர் அவதார தினத்தை கொண்டாடும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விரதம், பூஜை, வழிபாடு மற்றும் கிருஷ்ண லீலைகள் தொடர்பான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் களைகட்டின. குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் அணிவித்து மகிழ்ந்தனர்.
ஆகஸ்ட் 27 (விநாயகர் சதுர்த்தி)
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. வீடுகளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்ளும் மக்கள், விநாயகர் சிலைகளை வைத்து அலங்கரித்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் போன்ற நைவேத்யங்களை படைத்து பூஜை செய்தனர்.
இதேபோல் பொது இடங்களில் கோவில்கள் சார்பிலும், பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பிலும் பிரமாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பூஜைக்குப் பின் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைத்தனர்.
அக்டோபர் 1 (சரஸ்வதி பூஜை)
செப்டம்பர் 23-ம் தேதி நவராத்திரி விழாவின் சிகர நிகழ்வான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழிலில் வளர்ச்சி அடையவும் கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். சரஸ்வதி பூஜையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொழில் உபகரணங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள் என தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கலைவாணி முன்பு வைத்து, மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்து வழிபட்டனர்.
மறுநாள் (அக்டோபர் 2) விஜயதசமி என்ற வெற்றித்திருவிழாவுடன் நவராத்திரி விழா நிறைவுபெற்றது. நவராத்திரி முடிந்து பத்தாவது நாளில் அம்பிகை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் 2 (நள்ளிரவு): குலசை தசரா
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெற்று வந்த தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மகிஷாசுரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்வு கடற்கரையில் விமரிசையாக நடைபெற்றது. இதில், முதலில் தன் வேடத்துடன் வந்த சூரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிம்மம், எருமை மற்றும் சேவல் முகத்துடன் வந்த சூரனையும் அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர் சூலாயுதம் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து, அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக கடற்கரையில், நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
அக்டோபர் 20 (தீபாவளி)
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் புத்தாடை அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அக்டோபர் 27 (சூரசம்ஹாரம்)
முருகன் கோவில்களில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முருகப்பெருமான் சூரபத்மனை ஆட்கொண்ட நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. சூரனை வதம் செய்து ஆட்கொண்ட இடம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் காட்சிகள் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டன. இந்நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
டிசம்பர் 3 (திருக்கார்த்திகை)
திருக்கார்த்திகையை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். ஆலயங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை வேளையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவபெருமான் அடி, முடி காண முடியாத ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்து நின்ற தலமான திருவண்ணாமலையில், கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று, மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.
டிசம்பர் 19 (அனுமன் ஜெயந்தி)
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார் என்பது ஐதீகம். ராம நாமத்தை சொல்பவர்களுக்கு உடனடியாக வந்து அருள்புரியும் அனுமனை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்துசேரும். மார்கழி மாதம் அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் 4-ந் தேதி (19-12-2025) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மிகவும் விமரிசையாக அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. வடை மாலை அலங்காரத்தைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகெண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.