2025 ப்ளாஷ்பேக்: உயிர்ப்பலி வாங்கிய விமான விபத்துகள்..பஸ் விபத்துகள்
நாள்தோறும் விமானத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானப் பயணம் என்றாலே அது மிகவும் குஷியான விஷயமாக இருக்கும் சிலருக்கு.;
புதுடெல்லி,
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் மிக முக்கிய இடத்தை வகிப்பது, விமானக் கண்டுபிடிப்பு என்றால் அது மிகையாகாது. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே சகலமும் முன்னேறியதாகச் பெரியவர்கள் கூறுவார்கள். அது போலத்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப் பட்டதால்தான் பரந்து கிடக்கும் பூமி, பந்தாகச் சுருண்டு போனது. பக்கத்திலிருக்கும் சிங்கப்பூருக்கே பலநாள் கப்பற் பயணம் மேற்கொண்டார்கள் நம் முன்னோர். நாம் அப்படியா? காலை டிபனைச் சென்னையில் முடித்து விட்டு, மதியம் சாப்பிட சிங்கப்பூரில் இறங்கி விடுகிறோம்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா என்று எல்லா நாடுகளுக்கும் எளிதாகப் பறந்து விடுகிறோம். அதிலும் ஐடி நிறுவனங்களின் ஆதிக்கம் ஆரம்பித்த நாளிலிருந்து, விமானங்களின் எண்ணிக்கை விரைந்தே கூடி விட்டது. வயதானவர்களுங்கூட உலகை வலம் வர ஆரம்பித்து விட்டார்கள். கழுத்து வலிக்க உயரே பார்த்தவர்கள் எல்லாம் இன்று விமானங்களில் ஏக உயரத்தில் பறக்கிறார்கள்.
நாள்தோறும் விமானத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானப் பயணம் என்றாலே அது மிகவும் குஷியான விஷயமாக இருக்கும் சிலருக்கு.
ஆனால் எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லையே, சிலருக்கு விமானப் பயணம் என்றால் மிகவும் அச்சமூட்டுபவையாக இருக்கலாம். முதல் முறையாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கும், ஓரிரு முறை விமானத்தில் சென்றவர்களுக்கும் தற்போதும் ஒரு அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
உலகில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதே சமயம் வானில் பறக்கும் விமானங்களும் அவ்வப்போது விபத்துக்களில் சிக்குகின்றன. உலகில் வேறு எந்த வகையான விபத்துக்களுடன் ஒப்பிடும்போதும் விமான விபத்துக்கள் அரிதானவைதான். எனினும் ஒரு விமானம் விபத்தில் சிக்கினால் கூட, அது உலகையே உலுக்கி விடுகிறது.
விமான விபத்துக்கள் தொடர்பான செய்திகளை படித்தாலே நம்மை அறியாமல் நம் உடலில் நடுக்கம் பரவி விடுகிறது. விமான விபத்துக்களினால் அதிக அளவிலான பொருள் சேதாரமும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. சாலையில் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கான பெரும்பாலான காரணங்கள் நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் விமானங்கள் விபத்துக்களில் சிக்குவது எதனால்? என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. விமானங்கள் விபத்துக்களில் சிக்குவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்தநிலையில், இந்த ஆண்டு உலகம் முழுவதும் விமான போக்குவரத்து துறை சந்தித்த விபத்துகள் வருமாறு:
ஜனவரி 29, 2025 அன்று, லைட் ஏர் சர்வீசஸ் சார்பாக ஈகிள் ஏர் இயக்கப்படும் பீச் கிராப்ட் 1900டி விமானம் தெற்கு சூடானின் கிரேட்டர் அப்பர் நைல் பகுதியில் அமைந்துள்ள யூனிட்டி ஸ்டேட்டில் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் யூனிட்டி ஏர்ஸ்ட்ரிப்பில் இருந்து ஜுபா சர்வதேச விமான நிலையத்திற்கு வழக்கமான திட்டமிடப்பட்ட சார்ட்டர் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது , புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 21 பேரில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் தெற்கு சூடான் தலைநகர் ஜுபாவிற்கு எண்ணெய் தொழிலாளர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது விமானம் விபத்திற்குள்ளானது.
ஜனவரி 29
வாஷிங்டன் டிசி-க்கு அருகில் உள்ள போடோமாக் நதிக்கு மேலே ஒரு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் விமானமும், ஒரு அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் (67 பேர்) உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டனர். இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஜனவரி 31
ஜனவரி 31, 2025 அன்று, ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ் இயக்கப்படும் லியர்ஜெட் 55 விமானமான மெட் ஜெட்ஸ் விமானம் 056, பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவின் காஸ்டர் கார்டன்ஸ் பகுதியில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது . இதில் 6 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
மாயமான விமானம்… 10 பேர் காணவில்லை…
பிப்ரவரி 06: பெரிங் ஏர் 445 ரக விமானம் பெரிங் கடலுக்கு மேலே நோம் நகரத்திற்கு செல்லும் பாதையில் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டது. காணாமல் போன அந்த விமானத்தில் 9 பயணிகள் மற்றும் 1 விமானி உட்பட 10 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு பின் விமானத்தின் பாகங்கள் நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டன, மேலும் மூன்று பேர் உள்ளே இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 17: டெல்டா இணைப்பு விமானம் 4819 (Delta Connection Flight 4819) என்பது மினியாபோலிஸிலிருந்து டொராண்டோவிற்குச் சென்ற ஒரு விமானம், பிப்ரவரி 17 -ம் தேதி டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது; விமானம் கவிழ்ந்து, தீப்பிடித்தது, ஆனால் அனைத்து 80 பயணிகளும் உயிர் தப்பினர், பலர் காயமடைந்தனர்.
மார்ச் 17:
ஏரோலினியா லான்சா விமானம் 018 என்பது மார்ச் 17-ம் தேதி இஸ்லாஸ் டி லா பஹியா துறையின் ரோட்டன் தீவில் உள்ள ஜுவான் மானுவல் கால்வெஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து அட்லாண்டிடா துறையின் லா சீபாவில் உள்ள கோலோசன் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற ஒரு தனி விமானமாகும் . விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்ட பின்னர் உள்ளூர் நேரப்படி 18:18 மணிக்கு கடலில் மோதியது, ஹோண்டுரான் பாடகரும் அரசியல்வாதியுமான ஆரேலியோ மார்டினெஸ் உட்பட 17 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 12 பேர் கொல்லப்பட்டனர் .அதிகாரிகள் கூற்றுப்படி, இடிபாடுகள் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஏப்ரல் 10: ஹட்சன் நதியில் ஹெலிகாப்டர் விழுந்து 6 பேர் பலி
அமெரிக்காவில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்றது. நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் மேலே செல்லும்போது நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
லோயர் மன்ஹாட்டனின் ட்ரைபெக்கா பகுதியை நியூஜெர்சி சிட்டியுடன் இணைக்கும் ஹாலண்ட் சுரங்கப்பாதை அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏப்ரல் 17: கத்தி முனையில் விமானத்தை கடத்திய பயணி
ஏப்ரல் 17 -ம் தேதி டிராபிக் ஏர் விமானம் 711 பெலிசிய நகரங்களான கொரோசல் மற்றும் சான் பெட்ரோ இடையே விமானம் பறந்து கொண்டிருந்தபோது கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒரு பயணியால் கடத்தப்பட்டது .பிலிப் கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிறகு, கடத்தல்காரர் ஆயுதமேந்திய பயணியால் சுட்டுக் கொல்லப்பட்டார் .
மே-3-ம் தேதி: மே 3 ஆம் தேதி, சூடான் இராணுவம் நியாலா நகரில் ஒரு சரக்கு போயிங் 737-290 சி விமானத்தை சுட்டு வீழ்த்தியது. உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவுப் படைகளுக்கு அந்த விமானம் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
மே 22-ம் தேதி: அமெரிக்காவின் சான் டியாகோவில் ஒரு ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஜூன் 12-ம் தேதி: இந்தியர்களால் மறக்க முடியாத விமான விபத்து
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் 30 வினாடிகளில் கீழே நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்தவர்கள் உட்பட 274 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் நடந்த 3-வது பெரிய விமான விபத்து இதுவாகும். 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்தது. மும்பையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்,, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மும்பை பாந்த்ரா கடற்கரையில் விழுந்து நொறுங்கியதில் 213 பயணிகள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 21-ம் தேதி: பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான கிராண்டேயில், 21 பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கியது. இதையடுத்து வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், 8 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
ஜூன் 21-ம் தேதி: வங்காள தேச விமானப்படையின் செங்டு FT-7BGI போர் விமானம், டாக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது, இதில் 19 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வங்காள தேச ராணுவத்திற்குச் சொந்தமான ஜெட் விமானம் அங்குள்ள கல்லூரி வளாகத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர்.
ஜூலை 24-ம் தேதி: ரஷியாவில் இருந்து 49 பயணிகளுடன் புறப்பட்ட அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் (2311)விபத்தில் சிக்கியது. டின்டாவுக்கு சென்ற இந்த விமானம், சீனா எல்லையான ஆமுர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். இதில் அனைவரும் உயிரிழந்தாக தகவல்கள் வெளியானது. விமானம் தரையிறங்கும் போது விமானியின் பிழையே விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்டு 6-ம் தேதி: ஹார்பின் இசட்-9 என்பது ஒரு சீன இராணுவ ஹெலிகாப்டர் ஆகும் . ஆகஸ்ட் 6, 2025 அன்று, கானா விமானப்படையின் z9 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட எட்டு பேரும் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடார் தொடர்பை இழந்தது.
181 பேருடன் பயணித்த Jeju Air Flight 2216 அதிகாலை பெரும் விபத்துக்கு உள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் பலியானார்கள். 2 பேர் மட்டும் தப்பித்தனர்.
செப்டம்பர் 23-ம் தேதி: அங்காரா ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ரஷிய பயணிகள் விமானம் ஒன்று செப்டம்பர் 23-ம் தேதி அமுர் பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் ஆறு பணியாளர்கள் உட்பட 49 பேர் பயணித்தனர். சீன எல்லைக்கு அருகிலுள்ள டின்டா என்ற நகரத்தை நெருங்கும் போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதில் 48 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அக்டோபர் 20: துபாயிலிருந்து ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ விமானம் , தரையிறங்க முயன்ற போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகி, ஒரு சேவை வாகனத்தின் மீது மோதி, கடலில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இரண்டு விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து நடந்த போது ஓடுபாதை ஈரமாக இருந்ததாகவும், மழையால் இது நடந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
அக்டோபர் 28: மொம்பாசா ஏர் சபாரி விமானம் 203, குவாலே கவுண்டியில் உள்ள உகுண்டா விமான நிலையத்திலிருந்து கென்யாவின் நரோக் கவுண்டியில் உள்ள கிச்வா டெம்போ விமான நிலையத்திற்குச் சென்ற உள்நாட்டு விமானம். செஸ்னா 208 கேரவன் அக்டோபர் 28 அன்று குவாலே அருகே விபத்துக்குள்ளானது, அதில் இருந்த 11 பேர் பலியாகினர்.
நவம்பர்-4 -ம் தேதி:- அமெரிக்காவின் லூயிஸ்வில் பகுதியிலுள்ள முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹொனோலுலு பகுதிக்கு யுபிஎஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து பயங்கர விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து தகவலறிந்த லூயிய்வில்லே மெட்ரோ போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விமான விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆயிரம் கிலோ எடை கொண்ட விமானம் எரிபொருளுடன் வெடித்துச் சிதறியதே பெரிய அளவுக்கான தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
நவம்பர் 11-ம் தேதி: அஜர்பைஜானில் இருந்து விமானக்குழுவினர் உள்பட 20 பணியாளர்களுடன் ராணுவ விமானம் சி - 130 ஒன்று துருக்கிக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த விமானம் துருக்கிக்கு சொந்தமானது ஆகும். அஜர்பைஜான்- ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது. மேலும், விமானத்தில் பயணித்த 20 வீரர்களும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. சி-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும், தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவை உலுக்கிய அதிபயங்கர பஸ் விபத்துகள்:
2025-ல் நடந்த சில முக்கிய சாலை விபத்துகள் மற்றும் புள்ளி விவரங்கள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல துரதிர்ஷ்டவசமான பஸ் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதிக வேகம், மூடுபனி காரணமாக குறைவான பார்வைத்திறன், தீ விபத்து மற்றும் கவனக்குறைவு ஆகியவை இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் பஸ் விபத்து: 2025 அக்டோபர் 14 அன்று ஜெய்சால்மரிலிருந்து ஜோத்பூர் சென்ற ஏசி பஸ் தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 57 பயணிகள் பயணித்த அந்த பேருந்து அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்தின் வீரியத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
குர்நூல் தீ விபத்து (ஆந்திரப் பிரதேசம்):
அக்டோபர் 24 அன்று அதிகாலையில், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் சுமார் 19 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் (ஆந்திரா):
டிசம்பர் 12 அன்று ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். கடும் மூடுபனியால் வளைவு தெரியாததே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
தெலுங்கானா (செவெல்லா): 2025 நவம்பர் மாதத்தில் லாரி ஒன்றும் பேருந்தும் மோதியதில் 19 பேர் பலியாகினர்.
யமுனா எக்ஸ்பிரஸ்வே (உத்தரப் பிரதேசம்):
டிசம்பர் 16 அன்று அதிகாலை நிலவிய கடும் மூடுபனி காரணமாக, மதுரா அருகே 7 பேருந்துகள் உட்பட பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்ட முதற்கட்ட தரவுகளின்படி:
தேசிய நெடுஞ்சாலைகள்: 2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்த விபத்துகளில் சுமார் 26,770 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக வேகம்: 70% உயிரிழப்புகளுக்கு அதிவேகமே காரணமாக உள்ளது.
மொத்த விபத்துகள்:
2025-ல் இந்தியாவில் சுமார் 1.6 லட்சம் முதல் 1.7 லட்சம் வரை சாலை விபத்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட 4.3% அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள்: உயிரிழந்தவர்களில் சுமார் 55% பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதிய பராமரிப்பின்மை: தனியார் பேருந்துகளில் தீயணைப்பு கருவிகள் இல்லாமை மற்றும் அவசரக் கால கதவுகள் சரியாக செயல்படாதது உயிரிழப்புகளை அதிகரித்தது.
தூக்கமின்மை: அதிகாலை நேரங்களில் ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்குவது தொடர்கதையாக உள்ளது. மத்திய அரசு தற்போது பேருந்துகளுக்கான பாதுகாப்பு தரங்களை மேம்படுத்த 'Bharat NCAP' போன்ற புதிய விதிகளை அமல்படுத்தி வருகிறது.