டிரோன்கள்: ஒரு அறிமுகம்...!

Update: 2023-04-27 16:30 GMT

'டிரோன்' எனப்படும் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு, நம் இந்தியாவில் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி முக்கிய காரணம் என்றாலும், நம் மத்திய அரசின் ஊக்குவிப்பும், டிரோன் துறையை, வெகுவாக வளர்த்தெடுக்கிறது.

குறிப்பாக டிரோன் உருவாக்கவும், இயக்கவும் ஆக்கப்பூர்வமான முறைகளில் உபயோகிக்கவும் பிரத்யேக பயிற்சி நிலையம், கல்வி நிலையங்களை உருவாக்கி இருப்பதுடன், அதை இளைஞர்கள் இளம்பெண்கள் கற்றுக்கொள்ள பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் டிரோன்களை பற்றியும், அதிலிருக்கும் பிரிவுகளை பற்றியும், அதில் பயிற்சி பெறவும், டிரோன் உரிமம் பெறவும் தேவையான வழிகாட்டுதல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

* டிரோன்

டிரோன் என்றால், ஆளில்லா பறக்கும் வாகனம் (Unmanned aerial vehicle) என்று அர்த்தம்.

* வகைகள்

பொதுவாக டிரோன்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 250 கிராம் எடை கொண்டது நானோ (Nano) டிரோன். 250 கிராமில் இருந்து 2 கிலோ வரை எடை இருக்கக்கூடியது மைக்ரோ (Micro) டிரோன். 2 கிலோவிலிருந்து 25 கிலோ வரை எடை இருக்கக்கூடியது ஸ்மால் டிரோன் (Small).

25 கிலோவிலிருந்து 150 கிலோ வரை எடை இருக்கக்கூடியது மீடியம் (Medium) டிரோன். 150 கிலோவிற்கு மேல் இருப்பது லார்ஜ் (large) டிரோன்.

பொதுவாக 2 கிலோவிலிருந்து நாம் டிரோன்கள் பயன்படுத்துகிறோம். ராணுவப் பயன்பாடு மற்றும் சினிமாக்களில் அதிக எடையுடன் கூடிய டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.




* பயன்பாடுகள்

பல்வேறு பயன்பாடுகளுக்காக டிரோனை மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, விவசாயத்தில் பயிர்களைக் கண்காணிக்க, மகசூல் தொடர்பாக கணக்கிட, உரம் மற்றும் மருந்து தெளிக்க டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கைப் பேரிடர் சமயத்தில், சேத மதிப்பைக் கணக்கிட, பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, சேதமடைந்த நகரத்தை மறுகட்டமைப்பது தொடர்பாக சர்வே எடுக்க என பல்வேறு விஷயங்களுக்கு டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவை மட்டுமின்றி, கல்யாண வீடுகளில் வீடியோ எடுக்க, இ-வர்த்தகத்திற்காக பொருட்களை கொண்டு சேர்க்க, நிலங்களை சர்வே செய்ய, பல ஏக்கர் பண்ணைகளை கண்காணிக்க... என டிரோன்கள் பல துறைகளில், பல தளங்களில் பயன்படுத்தப்படுகிறது.

மலை கிராமங்களில் வாக்கு இயந்திரங்களை கொண்டு சேர்க்க, மருந்துகளை சப்ளை செய்ய... என டிரோன்களின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

* வரைமுறை




நாம் திரும்பும் திசைகளில் எல்லாம் பறந்து கொண்டிருக்கும் டிரோன்களை எல்லோராலும் இயக்கிவிடமுடியாது. உங்களுக்கு அதை இயக்கும் திறமைகள் இருந்தாலும், அதை முறைப்படி பொது இடங்களில் இயக்க லைசன்ஸ் வாங்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்புவரை குறிப்பிட்ட வரைமுறைகள் இல்லாததால், பல்வேறு இடங்களில் டிரோன்களைப் பறக்க விட்டனர். இதனால், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதப்பட்டதால் மத்திய அரசு டிரோன்களுக்கு தடைவிதித்தது.

டிரோன்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதே போல, மத்திய அரசின் அமைப்பானது (Directorate General of Civil Aviation), டிரோன்கள் இயக்குவது தொடர்பாக சில வரைமுறைகளையும், விதிகளையும் வகுத்துள்ளது.

* தகுதிகள்

டிரோன்களை இயக்கும் பைலட்டிற்கு என சில தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற டிரோன் இயக்கப் பயிற்சி அளிக்கக்கூடிய சில பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அதில் பயிற்சிபெற்று சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். பத்தாவது, ஆங்கிலத்தில் படித்து பாஸ் செய்திருக்க வேண்டும். இது மட்டுமே முக்கிய தகுதிகள். மேலும், லைசன்ஸ் பெற குறிப்பிட்ட பணமும் செலுத்த வேண்டும்.

சவுந்தர்ய நாயகி, கல்வியாளர், சென்னை.

அடுத்த வாரம்: டிரோன் பற்றி கல்வி புகட்டும் அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் டிரோன் லைசென்ஸ் பெறும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.

Tags:    

மேலும் செய்திகள்