முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா


முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 28 Dec 2023 9:06 PM IST (Updated: 28 Dec 2023 9:26 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

இதில் முதலாவதாக களமிறங்கிய இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 3 நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 185 ரன்களுக்கு ஷர்த்துல் தாகூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறிது நேரம் தாக்கு பிடித்த ஜெரால்ட் கோட்ஸி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்ரிக்கா அணி 408 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய மார்கோ ஜான்சன் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் விராட் கோலி நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், யென்சென் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


Next Story