ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை


ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை
x

ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி

ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நூறடி சாலையில் கார்களுக்கான மின்சாதன பொருட்கள் மற்றும் ஸ்டிக்கர் கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் கடை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசியதாவது:-

புதுச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே விபத்துகள் தொடர்ந்து வருகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ-பஸ் மோதி கொண்ட விபத்தில் பஸ் டிரைவர் அன்பரசன், ஆட்டோ டிரைவர் விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

6 பேருக்கு அனுமதி

ஆட்டோக்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது ஆட்டோவில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆட்டோ கட்டணம் குறைவாக இருக்கிறது என்பதற்காக குழந்தைகளை அனுப்ப வேண்டாம். ஒரு ஆட்டோவில் பள்ளி மாணவர்கள் 5 அல்லது 6 பேர் வரை செல்லலாம். அதற்கு மேல் அனுமதிக்க முடியாது. போக்குவரத்து போலீசார் ஆய்வின்போது ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நூறடி சாலையில் உள்ள கார் மின்சாதன பொருட்கள் மற்றும் ஸ்டிக்கர் கடைகள் முன் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துவோர் மீதும், கார் உரிமையாளர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கையும், சம்பந்தப்பட்ட கடையின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் முதலுதவி சிகிச்சை குறித்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story