மின் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை


மின் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
x

மின்துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

மின்துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

பட்டமளிப்பு விழா

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு இயக்குனரகம் சார்பில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் 9 தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா புதுவை கம்பன் கலையரங்கத்தில் இன்று நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா, அரசு செயலர் முத்தம்மா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வேலை வாய்ப்பு

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஐ.டி.ஐ. மாணவர்கள் மீது அக்கறை செலுத்தி வருகிறது. முன்பு ஐ.டி.ஐ.யில் குறைந்த மதிப்பெண் பெறுவோரும் மற்றும் ஏழை மாணவர்களே சேருவார்கள். தற்போது இந்த நிலை மாறி உள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களும் ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். இதனால் தொழில் பயிற்சி நிலையங்கள் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

தொழிற்பயிற்சி முடித்த மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. மின் துறையில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் மூலம் தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. புதுவை சேதராப்பட்டில் 750 ஏக்கரில் புதிய தொழிற்சாலைகள் வருகிறது. இதன் மூலம் தொழிற்பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story