அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்


அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
x

புதுவையில் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஆசிரியர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த ஆசிரியர்கள் இன்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர்கள் கலந்தாய்வு

புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை 2023-24ம் ஆண்டு ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில் 55 வயதிற்கு மேற்பட்ட தலைமை ஆசிரியருக்கு வெளிபிராந்திய பணி இடமாற்றத்தில் இருந்தும், 57 வயது நிரம்பிய ஆசிரியர் களுக்கு கிராமப்புற பணியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருதரப்பு ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன் முற்றுகையிட்டனர். பின்னர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்து அதற்கான பட்டியலையும் வெளியிட்டது.

தர்ணா

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் புதுச்சேரி அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகில் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பாரி தலைமை தாங்கினார். இதில் செம்பியன், அருள்சாமி, பாலகுமார், சிரில் நிக்கோலஸ், பொற்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 900 ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வை கல்வித்துறை வெளிப்படையாக நடத்தவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.


Next Story